Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜ கொடுப்பதை வாசிக்கும் எடப்பாடி அதிமுக சங்கிகள் கட்சியாக மாறிவிட்டது: செல்வப்பெருந்தகை விளாசல்

சென்னை: பாஜ எழுதி கொடுப்பதை எடப்பாடி பழனிசாமி வாசிக்கிறார். அதிமுக தற்போது திராவிட கட்சி அல்ல, சங்கிகள் கட்சியாக மாறிவிட்டது என்று செல்வப்பெருந்தகை கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு குறித்து மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள் அறிமுகக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: 2026 சட்டமன்ற தேர்தல் ஆயதத்த பணிகளை முழுமையாக செய்து வருகிறோம். சட்டமன்ற கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் கூடுதல் தொகுதிகளை கேட்பது அவரது சொந்த கருத்து. தேசிய தலைமையின் அனுமதியில்லாமல் கூட்டணி கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து என்னால் பேச முடியாது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு வலிமையாக உள்ளது என்பதை மேற்கோள் காட்டித்தான் தேசிய தலைமை திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவார்கள். ஜெயலலிதா காலத்திலேயே கோயில் நிதியிலிருந்து கல்வி நிறுவனங்களை கட்டினார்கள். அதை திமுக ஆட்சியில் அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். பாஜ, ஆர்.எஸ்.எஸ். எழுதி கொடுப்பதை எடப்பாடி பழனிசாமி வாசிக்கிறார். அதிமுக திராவிட கட்சி அல்ல. அந்த காலம் எல்லாம் மலையேறி போச்சு‌, இப்போது அதிமுக சங்கிகள் கட்சி ஆகிவிட்டது.

ஜெயலலிதாவை பழித்து பேசியவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்ற குடியாத்தத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் 13ம் தேதி சென்னையில் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், கே.விஜயன், எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், அசன் மவுலானா, துரை சந்திரசேகர், அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் மற்றும் நிர்வாகிகள் மன்சூர் அலிகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.