சென்னை: பாஜக நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் என விசிக எம்.பி. ரவிக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக விசிக எம்.பி. ரவிக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது; விஜய் தரப்பின் மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பாஜகவின் பிடியில் விஜய் சிக்கிக் கொண்டு விட்டார் என சமூக ஊடகங்களில் பலர் பதிவிடுவதைப் பார்க்கிறேன். நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்ததே பாஜக சொன்னதால்தான் என முன்பிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம். திமுகவுக்குச் செல்லும் சுமார் 14% மதச் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்க விடாமல் செய்வது, அதன் பின்னர் மகாராஷ்டிரா மாடலில் தமிழ்நாட்டிலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான் பாஜகவின் திட்டம். அதற்காகக் களமிறக்கப்பட்டிருப்பவர்தான் விஜய்.
பாஜகவை கொள்கை எதிரி என்பதும், திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருக்கிறது எனக் கூறுவதும்; காங்கிரஸ் கட்சியோடு தான் நெருக்கமாக இருப்பதுபோன்றத் தோற்றத்தை ஏற்படுத்துவதும், சிறுபான்மையினரிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக விஜய் கையாளும் தந்திரங்கள். பாஜக அணியில் அவர் சேர்ந்துவிட்டால் இந்த தந்திரங்கள் பலிக்காமல் போய்விடும். அதுமட்டுமின்றி அதிமுக வாக்கு வங்கியும் காப்பாற்றப்பட்டு அதை பலவீனப்படுத்துவது என்ற பாஜக- விஜய் நோக்கமும் தோற்றுவிடும்.
எனவே, பாஜக அணியில் அவரைச் சேர்க்காமல் தனித்து நிற்க வைத்து தேர்தலுக்குப் பிறகு அவரது ஆதரவைப் பெறவே பாஜக திட்டமிடும் எனக் கருதுகிறேன். பாஜகவினர் நடத்தும் அரசியல் நாடகத்தில் அவர்கள் எழுதித்தரும் ஸ்கிரிப்டைப் பேசும் அரசியல் நடிகர்தான் விஜய். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.