Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் அறிவிக்கப்பட்ட ஓபிஎஸ் மாநாடு திடீர் ஒத்திவைப்பு

சென்னை: பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் அறிவிக்கப்பட்ட ஓபிஎஸ் மாநாடு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டு கடிதம் எழுதினார். ஆனால் கடைசி வரை ஓபிஎஸ்க்கு அனுமதி கிடைக்கவில்லை. மேலும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்த போதும் ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்து விட்டார். இதனால் கடும் அதிர்ச்சியில் இருந்த ஓபிஎஸ் அணியினர் பாஜ மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர். பாஜவை நம்பி வந்தோம்; தற்போது நடுத்தெருவில் விட்டு விட்டனர். பாஜவை நம்பி வந்தவர்களை கைவிடுவது தான் அதன் பழக்கம். எனவே, பாஜவுக்கு பாடம் புகட்டும் வகையில் அந்த அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ் கடந்த ஜூலை 31ம் தேதி அதிரடியாக அறிவித்தார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ், அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் ஓபிஎஸ் திமுக பக்கம் போக உள்ளதாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து பாஜ தரப்பிலும் ஓபிஎஸ் தரப்பைச் சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

மோடியை பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்று மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், இதனை ஓபிஎஸ் ஏற்கவில்லை. தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராகவும், எடப்பாடிக்கு எதிராகவும் கண்டன அறிக்கைகளை ஓபிஎஸ் வெளியிட்டு வந்தார்.இதற்கிடையில் செப்டம்பர் 4ம் தேதி மதுரையில் ஓபிஎஸ் அணி சார்பில் மாநாடு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வரும் 4ம் தேதி நடைபெறவிருந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘14-07-2025 அன்று சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஓய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க வரும் 4ம் தேதி மதுரையில் நடைபெறுவதாக இருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு உயர்மட்டக் குழு ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியின் மாநாடு திடீரென ஒத்திவைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.