Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குர்ஆன் மீது சத்தியம் செய்து சொல்கிறேன்... பாஜகவுடன் கூட்டணி அமைக்க கெஞ்சினேனா?: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆவேசம்

ஸ்ரீநகர்: பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, குர்ஆன் மீது சத்தியம் செய்து திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஜம்மு - காஷ்மீரில் புட்காம் மற்றும் நக்ரோட்டா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், பாஜக தலைவர் சுனில் சர்மா கூறுகையில், ‘2014 மற்றும் 2024 சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதற்காக உமர் அப்துல்லா பாஜக தலைமையை அணுகினார்.

குறிப்பாக, 2024ல் மாநில அந்தஸ்து வழங்குவதற்குப் பதிலாக கூட்டணி அமைக்கத் தயார் என்று அவர் பேரம் பேசினார். இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதாக இருந்தால், உமர் அப்துல்லா குர்ஆன் மீது சத்தியம் செய்யத் தயாரா?’ என்று சவால் விடுத்திருந்தார். இவரது இந்த கருத்து ஜம்மு - காஷ்மீர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக தலைவர் சுனில் சர்மாவின் இந்த குற்றச்சாட்டுக்கு உமர் அப்துல்லா கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாநில அந்தஸ்துக்காகவோ அல்லது வேறு எந்தக் காரணத்துக்காகவோ, 2024ல் பாஜகவுடன் கூட்டணி அமைக்க நான் முயற்சிக்கவில்லை என்பதை, புனித நூலான குர்ஆன் மீது சத்தியம் செய்கிறேன். சுனில் சர்மாவைப் போல் பிழைப்புக்காக நான் பொய் சொல்வதில்லை’ என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் உமர் அப்துல்லா, தற்போது ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.