Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜவின் கைப்பாவையாக திகழும் அதிமுக; எஸ்ஐஆருக்கு ஆதரவு தெரிவித்து உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு

சென்னை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: இந்திய நாட்டில், மக்களின் மிக முக்கிய உரிமையான வாக்குரிமையை உறுதி செய்து ஜனநாயகத்தை பாதுகாக்க நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்க்கும் நிலையில், ஒரே ஒரு கருப்பு ஆடு இந்த மக்கள் விரோத கொடூர செயலை ஆதரித்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. அது வேறு யாரும் அல்ல, ஒன்றியத்தை ஆளும் பாசிச கூட்டத்தின் பிரதான அடிமை கட்சி அதிமுகதான். இதன் மூலம் ”இந்தியாவிலேயே எஸ்ஐஆர்க்கு ஆதரவாக நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஒரே கட்சி’’ என்று குடிமக்கள் அனைவரும் தலையில் அடித்து கொண்டு வியந்து பார்க்கும் அற்புதமான பெயரை அதிமுக பெற்றுள்ளது.

இதில், சிறப்பு என்னவென்றால் பாஜ கூட பீகாரில் நடந்த வழக்கில் எஸ்ஐஆர்க்கு ஆதரவாக நீதிமன்றம் செல்ல தயங்கியது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒன்றிய அரசின் கூட்டணி கட்சியாக இருந்தும், எஸ்ஐஆர் குறித்து தங்களது கவலைகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியும் இந்த சட்டம் சிறுபான்மையினரின் குடியுரிமையை சந்தேகிக்கப் பயன்படுத்தப்படக் கூடாது என தெளிவாக கருத்து தெரிவித்து ஒரு ”க்” வைத்துள்ளது.

ஆனால், இத்தகைய சூழ்நிலையில் கூட பாஜவின் கைப்பாவையாக திகழும் அதிமுக மட்டும் தான் நாட்டிலேயே எஸ்ஐஆர்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, நேரடியாக உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில் அவர்கள் குறைந்தது மவுனமாகக்கூட இருந்திடாமல், முன்பு 2016-21 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடமானம் வைத்தது போல முழுமையான அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மக்களுக்கு அதிமுக செய்திருக்கும் மிக நீண்ட துரோகப் பட்டியலில் இது இனி முதல் 3 இடங்களை பிடிக்கும் அளவிற்கு ஒரு மிகப் பெரிய ஜனநாயக விரோத செயலை செய்துள்ளது அதிமுக.

ஆனால் நமக்கு கவலை வேண்டாம், எது வந்தாலும் தமிழ்நாட்டின் நலனையும் இங்கு வாழும் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து நிற்கும் மகத்தான தலைவர் தமிழ்நாடு முதல்வர் ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத திட்டத்தின் கொடூர உள்நோக்கத்தை முறியடித்து, தமிழ் மக்களின், குறிப்பாக நமது சிறுபான்மை மக்களின், ஜனநாயக உரிமைகளை நிச்சயம் பாதுகாப்பார். திமுக தலைவர் வழிகாட்டுதலின்படி களத்தில் திமுக உடன்பிறப்புகள், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணையோடு, அனைத்து மக்களின் வாக்குரிமைகளை பாதுகாப்பார்கள்.