Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பிறந்த வீடா? புகுந்த வீடா? எஸ்ஐஆர் பணியால் மணமான பெண்களின் ஓட்டு பறிபோகும்: 2002ல் வாக்களித்த இடத்தை அப்டேட் செய்வதில் சிக்கல்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீத கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவற்றை பூர்த்தி செய்து திரும்பப் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அதற்கு தேவையான கால அவகாசம் வழங்கப்படவில்லை என வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தற்போது பருவமழைக்காலம் என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காலையில் வயல் வேலைக்கு செல்லும் மக்கள் இரவு தான் வீடு திரும்புகின்றனர். இதனால் மக்களிடம் படிவத்தை வழங்கி, பூர்த்தி செய்து திரும்ப ஒப்படைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் படிவத்தில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்து கொடுப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. குறிப்பாக திருமணமான பெண்களின் வாக்குகளை உறுதிப்படுத்துவதில் பெரிய அளவில் சிரமம் ஏற்படுகிறது. பெண்களை பொறுத்தவரை பிறந்த ஊரில் இருந்து வேறு தாலுகா, மாவட்ட பகுதிகளுக்கு திருமணமாகி சென்று விடுகின்றனர்.

அப்படி செல்கின்ற பெண்களுக்கு பிறந்த ஊரிலும், திருமணம் செய்த ஊரிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. இதில் பெரும்பாலான பெண்கள் திருமணம் செய்து வசிக்கும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில்தான் ஓட்டு போட்டு வருகின்றனர். தற்போது அந்த வாக்குகளை உறுதி செய்வதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் கடந்த 2002ம் ஆண்டு அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் பிறந்த ஊரில் இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்களது பெற்றோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்திருக்க வேண்டும். அந்த தகவலை தற்போது திருமணமாகி சென்ற ஊரில் உள்ள வாக்காளர் பட்டியலில் பாக எண், வரிசை எண் ஆகியவற்றை குறிப்பிட்டு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே வாக்காளர் என உறுதி செய்யப்படும்.

எனவே, 23 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வாக்காளர் பட்டியலை அவர்களது பிறந்த ஊரிலிருந்து வாங்கி, அதில் உள்ள பாக எண், வரிசை எண்ணை குறிப்பிட்டு படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க முடியாமல் பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், எழுத, படிக்க தெரியாத கிராமப்புறத்தில் வசிக்கும் திருமணமான பெண்கள் இந்த தகவல்களை திரட்டி படிவத்தை பூர்த்தி செய்து வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டு விடுமோ என அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பெண் வாக்காளர்கள் கூறுகையில், ‘‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் யாருடைய வாக்கும் விடுபட்டு விடாமல் உறுதிப்படுத்த வேண்டுமெனில் தேவையான கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் முக்கிய அரசு அலுவலகங்களில் எளிதாக கிடைக்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். இ.சேவை மையங்களில் எந்தப் பகுதி வாக்காளர் பட்டியல் தேவை என்றாலும் சுலபமாக கிடைக்கும் வகையில் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோன்று எளிமைப்படுத்தினால் மட்டுமே பெண் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதிப்படுத்த முடியும்’’ என்றனர்.