Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நண்பரின் பிறந்தநாள் பார்ட்டியில் பயங்கரம் புதுச்சேரி ரெஸ்டோ பாரில் சென்னை மாணவன் குத்திக்கொலை: மற்றொரு மாணவன் கவலைக்கிடம், உரிமையாளர் உள்பட 6 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி ரெஸ்டோ பாரில் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டியில் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மற்றொரு மாணவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை தொடர்பாக ரெஸ்டோ பார் உரிமையாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரபாண்டியன். இவர், பத்திரப்பதிவு துறையில் சார் பதிவாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி தவமணி. இவர்களது மகன் மோஷிக் சண்முக பிரியன்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) படித்து வந்தார். அதே கல்லூரியில், எம்சிஏ 2ம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரை சேர்ந்த ஷாஜன் (23), தனது பிறந்த நாளை கொண்டாட கல்லூரியில் படிக்கும் சக நண்பர்கள் மற்றும் தன்னுடன் படித்த தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி நண்பர்கள் என 15 பேரை அழைத்து கொண்டு, புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் வந்தார்.

நண்பர்களுக்கு மது பார்ட்டி அளிக்க மிஷின் வீதியில் உள்ள தனியார் ரெஸ்டோ பாருக்கு அழைத்து சென்றார். நள்ளிரவு 12 மணியை கடந்த நிலையில், ஷாஜனுடன் வந்த நண்பர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரெஸ்டோ பாரில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள், அவர்களை வெளியே அனுப்புமாறு பார் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதனால் பவுன்சர்கள், பார் ஊழியர்கள் அவர்களை பாரில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த அவர்கள், தங்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள்? என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த பார் ஊழியரான அசோக்ராஜ், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மோஷிக் சண்முகபிரியனை முதுகில் குத்தியுள்ளார். இதை தட்டிக்கேட்ட ஷாஜனையும் இடுப்பில் குத்தியுள்ளார். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியகடை போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மோஷிக் சண்முகபிரியன் வழியிலேயே இறந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த ஷாஜனுக்கு அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பின்னர், சட்டம் ஒழுங்கு டிஐஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பி கலைவாணன், கிழக்கு எஸ்பி இஷா சிங் ஆகியோர் கொலை நடந்த இடம், ரெஸ்டோ பாரை பார்வையிட்டனர்.

மேலும், பாரில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கொலை தொடர்பாக அசோக்ராஜ், ரெஸ்டோ பார் உரிமையாளர் ராஜ்குமார், ஊழியர் டேவிட் உள்ளிட்ட 6 பேரை பெரியகடை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* அரசியல் கட்சி பிரமுகரின் மகள் கொலைக்கு காரணமா?

மதுரை மாவட்டம் மேலுரை சேர்ந்த ஷாஜன் பிறந்தநாள் கொண்டாட 15க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள தனியார் ரெஸ்டோ பார் சென்றுபோது, புதுச்சேரியில் பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகரின் மகள் மற்றும் அவருடைய நண்பர்கள், மேற்கூறிய ரெஸ்டோ பாரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது, ஷாஜனின் நண்பர் ஒருவர் ரெஸ்டோ பார் உள்ளே செல்ல முயன்றபோது, இளம்பெண்ணை இடித்ததாக கூறப்படுகிறது.

இதனால், கோபமடைந்த பெண், அந்த நபரை தகாத வார்த்தையால் திட்டியதாகவும், உடனே அப்பெண்ணை தட்டிக்கேட்ட போது, பாரில் இருந்த பவுன்சர், நீங்கள் யாரும் புதுச்சேரியை தாண்ட முடியாது என மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனாது. தொடர்ந்து, ரெஸ்டோ பார் உள்ள சென்ற கல்லூரி மாணவர்களை, பவுன்சர்கள் சரமாரியாக தாக்கியதாகவும், பதிலுக்கு கல்லூரி மாணவர்கள் ரெஸ்டோ பாரை அடித்து உடைத்ததாகவும் தெரிகிறது.

அதன்பிறகே, பாரில் இருந்த ஊழியர் கத்தியால் 2 பேரை குத்தியதாகவும், இச்சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது என்று கொலை செய்யப்பட்ட நண்பர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் இருந்து ரெஸ்டோ பார் உரிமையாளரை காப்பற்றும் முயற்சியில் போலீஸ் ஈடுபடுவதாக மாணவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

* போலீஸ் கண்முன்னே கத்திக்குத்து: அலட்சியத்தால் பறிபோன மாணவன் உயிர்

கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த மோஷிக் சண்முக பிரியனை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக, புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்ல காரை எடுத்துள்ளனர். அப்போது, பெரியகடை போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, எங்கே செல்கிறீர்கள்? எனக்கேட்டு காரின் சாவியை திடீரென பிடுங்கி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மாணவரை மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்ல வேண்டும் என்று அவர்கள் கெஞ்சியும் போலீசார் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது.

இதனிடையே, போலீசார் வந்தது தெரியாமல் பார் ஊழியர் அசோக்ராஜை ஷாஜன் தட்டிக்கேட்டுள்ளார். அவரையும் போலீஸ் கண்முன்னே அசோக்ராஜ் கத்தியால் 2 முறை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ஷாஜனை போலீசார் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், 30 நிமிடங்கள் கார் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போதுதான், காரில் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் மோஷிக் இருப்பது போலீசாருக்கு தெரியவந்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, ேமாஷிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசாரின் அலட்சியத்தால் மோஷிக் உயிரிழந்ததாக, அவரது நண்பர்கள் கூறி கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.