Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாரிசில் பிறந்தநாள் கொண்டாட்டம் கனடா மாஜி பிரதமருடன் கைகோர்த்த பாப் பாடகி: காதல் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி

பாரிஸ்: பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரியும், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தங்களது காதலை முதல்முறையாக பொதுவெளியில் உறுதிப்படுத்தியுள்ளனர். கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு, மனைவி சோஃபி கிரெகோயரை கடந்த 2023ம் ஆண்டு பிரிந்தார். அதுபோல், பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி தனது காதலரும், நடிகருமான ஆர்லாண்டோ ப்ளூமை கடந்த ஜூலை மாதம் பிரிந்தார்.

இரு ஜோடிகளும் பிரிந்த பிறகு, கடந்த ஜூலை மாதம் கனடாவின் மாண்ட்ரீல் நகரில் கேட்டி பெர்ரியும், ஜஸ்டின் ட்ரூடோவும் தனியாக சந்தித்தபோது, அவர்கள் காதல் குறித்த செய்திகள் வெளியானது. அதை தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் கலிபோர்னியாவின் சாண்டா பார்பரா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு படகில் இருவரும் முத்தமிட்டும், கட்டித்தழுவியும் இருந்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்த ஜோடி முதல் முறையாக பாரிஸ் நகரில் பொதுவெளியில் ஒன்றாக தோன்றியுள்ளது. தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பாரிஸ் சென்றிருந்த கேட்டி பெர்ரி, நேற்று முன்தினம் இரவு ஜஸ்டின் ட்ரூடோவுடன் அங்குள்ள புகழ்பெற்ற ‘கிரேஸி ஹார்ஸ் பாரிஸ்’ கேபரே நிகழ்ச்சிக்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, இருவரும் கைகோர்த்தபடி ஜோடியாக நடந்து வந்தனர். அப்போது கேட்டி பெர்ரி சிவப்பு நிற ஆடையிலும், ஜஸ்டின் ட்ரூடோ கருப்பு நிற உடையிலும் இருந்தனர்.

அவர்களை கண்ட ரசிகர்களும், புகைப்படக்கலைஞர்களும் சூழ்ந்துகொண்டனர். இதுகுறித்து அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், ‘ஜஸ்டின் ட்ரூடோவுடன் கேட்டி பெர்ரி மிகவும் மகிழ்ச்சியாகவும், அவர் மீது அதிக ஈடுபாட்டுடனும் இருக்கிறார். ஜஸ்டின் ட்ரூடோவின் குழந்தைகளும் கேட்டி பெர்ரியை அன்புடன் வரவேற்றுள்ளனர். இருவருக்கும் இடையே இயல்பான பிணைப்பு ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளன.