புதுடெல்லி: பர்மிங்காமில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் சமயத்தில் அவசரகால கருவி இயங்கியதால் பதற்றம் ஏற்பட்டது. ஆனாலும் விமானம் பத்திரமாக தரையிறங்கியதால் பயணிகள் தப்பினர். பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் இருந்து இங்கிலாந்தின் பர்மிங்காம் நோக்கி ஏர் இந்தியா வின் போயிங் 787 விமானம் (ஏஐ117) நேற்று முன்தினம் புறப்பட்டது.
இந்த விமானம் பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கும் சமயத்தில், அவசரகால கருவியான ரேம் ஏர் டர்பைன் (ஆர்ஏடி) இயங்கத் தொடங்கியது. ஆனாலும் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் உள்ள இரு இன்ஜின்களும் செயலிழந்தாலோ, ஹைட்ராலிக் செயலிழப்பு ஏற்பட்டாலோ, அவசரகால மின்சாரத்தை உருவாக்க ரேம் ஏர் டர்பைன் தாமாக இயங்கத் தொடங்கும்.
கடந்த ஜூன் மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787 விமானம் இன்ஜின் அல்லது ஹைட்ராலிக் செயலிழப்பு காரணமாக புறப்பட்ட சில விநாடிகளில் கீழே விழுந்து 260 பேர் பலியாகினர். எனவே, ரேம் ஏர் டர்பைன் இயங்கத் தொடங்கியது ஏன் என்பது குறித்து விமானத்தில் பரிசோதனை செய்யப்படுவதாகவும், அதன் காரணமாக பர்மிங்காம்-டெல்லி விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் ஏர் இந்தியா விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.