Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஐரோப்பா, ஆசிய நாடுகளில் இருந்து வரும் பூஞ்சை கழுகு, செங்கழுத்து உள்ளான், மணல் கொத்தி பறவைகள்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் நல்லாற்றின் குறுக்கே பாசன பயன்பாட்டிற்காக 440 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது நஞ்சராயன் குளம். இது 500 ஆண்டுகளைக் கடந்து நீர் தேக்கமாக மாறியது. நல்லாற்றில் இருந்து வரும் தண்ணீர் இந்த குளத்தின் பெரும் பகுதியில் தேங்கி சதுப்பு நிலமாக உருவாகியது‌‌.

பெரும் புதராகவும், நல்ல உயிர்ச்சூழல் மிக்க பகுதியாகவும் இயற்கையாகவே மாறிய இந்த குளத்தை தேடி ஆண்டுதோறும் உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது, பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பறவைகளும் வலசை வந்து சென்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை பல்வேறு பறவைகள் இங்கு வலசை வந்து செல்கின்றன.

இதன் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நஞ்சராயன் குளத்தை 17 ஆவது பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. ஒன்றிய அரசு சார்பில் ராம்சார் தளமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு உள்நாட்டு பறவைகளாக கூழைக்கிடா, புள்ளி மூக்கு வாத்து, நாமக்கோழி, சின்னமுக்குளிப்பான், நெடுங்கால் உள்ளான், மீன்கொத்தி, பாம்புதாரா, அருவாள் மூக்கன், மயில் உள்ளான், கருங்குறுகு மற்றும் ரஷ்யா, ஐரோப்பா, சைபீரியா, மங்கோலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஸ்பூன்பில், கிரீன் ஹெரான், கிரேவாக் டெய்லர், சேன்ட் பையர் உள்ளிட்ட எண்ணற்ற பறவைகள் இங்கு வலசை வருகின்றன.

அக்டோபர் நவம்பர் மாதத்தில் வலசை வரும் பறவைகள் மார்ச் மாதம் வரையிலும் கூட நஞ்சராயன் குளத்தில் தங்கி இருந்து இளைப்பாறி செல்வது வழக்கம். இந்தகாலத்தில் உள்நாட்டு பறவைகள் தமிழகத்தின் வெவ்வேறு நீர் நிலைகளுக்கு சென்று விடும்.

தற்போது வலசை தொடங்கியுள்ள நிலையில் தற்போது முதலே ஏராளமான பறவைகள் நஞ்சராயன் குளத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளது. மேலும் ஒரு ஆச்சரியமாக இதுவரை திருப்பூரில் தென்படாத ஆனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்பட்ட ஐரோப்பா ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படும் செங்கழுத்து உள்ளான், பூஞ்சை கழுகு உள்ளிட்ட பறவைகள் அரிதாக காணப்படுகிறது.

இவை பொதுவாக தமிழகத்தில் காணக்கூடிய பறவைகள் இல்லாவிட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட இப்பறவைகள் வெவ்வேறு நாடுகளுக்கு வலசை செல்வதற்கு மத்தியில் இளைப்பாறுவதற்காக திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் இறங்கி இருக்கக்கூடும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா, ஆசிய நாடுகளான வெகு தூரத்தில் இருந்து பறந்து வரும் இந்த பறவைகள் தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு செல்லக்கூடியது. இடையில் ஓய்வெடுப்பதற்கும், இரை சேகரிப்பதற்கும் நஞ்சராயன் குளத்தில் 2 நாட்கள் முதல் ஒரு வார காலம் வரை தங்கி இருக்கலாம். என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர்.

இது குறித்து இயற்கை ஆர்வலர் ரவீந்திரன் காமாட்சி கூறுகையில், பொதுவாக நஞ்சராயன் குளத்தில் வலசை காலங்களின்போது வழக்கமாக காணப்படும் வெளிநாட்டு பறவைகள் வருவது இயல்பு. நேற்றைய தினம் புதிய வகை பறவை தென்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து சென்று பார்த்த போது இந்தியாவில் அரிதிலும் அரிதாக காணப்படும் செங்கழுத்து உள்ளான் பறவை தென்பட்டது. இது ஐரோப்பா நாடுகளில் வாழக்கூடியது. வலசைக்காக குளிர்காலங்களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடம்பெயரும்.

அவ்வாறு செல்லும் போது இடையில் உள்ள நீர் நிலைகளில் தனக்கான உணவை தேடுவதற்காகவும் இளைப்பாறுவதற்காகவும் வெவ்வேறு பகுதிகளில் தங்கலாம். இந்தாண்டு திருப்பூர் நஞ்சராயன் குளத்திற்கு வந்துள்ளது மிகவும் ஆச்சரியமானதாக கருதப்படுகிறது.

இவை மற்ற பறவைகளைப் போல் அல்லாமல் நீரில் சுழற்சி ஏற்படுத்தி அதன் மூலம் இரைதேடும். இதன் மூலம் ஏற்கனவே நஞ்சராயன் குளத்திற்கு வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை 191 ஆக இருந்த நிலையில் இதன் மூலம் 192 ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்திக்கடவு அவிநாசி தண்ணீர்

நஞ்சராயன் குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுழற்சி முறையில் தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தண்ணீரின் இருப்பு குறைந்தது. இந்த சூழ்நிலையில் வலசை காலம் நெருங்கி வருவதை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் மூலம் நீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது வலசை வருவதற்கு ஏற்ற சூழல் குளத்தில் நிலவுவதன் காரணமாக முன்கூட்டியே வெளிநாட்டு பறவைகள் வலசை வர துவங்கியுள்ளன.