Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடநாட்டில் பனி அதிகம் காரணமாக சென்னை நோக்கி படையெடுத்த பறவைகள்: அடுத்தடுத்து வரும் பறவைகளால் அழகாக காட்சி தரும் நீர்நிலைகள்

சென்னை: வடநாட்டில் பனி அதிகம் காரணமாக சென்னையை நோக்கி படையடுத்த வெள்ளை கொக்குகள், சாம்பல் நிற பெரிய கொக்குகள் மற்றும் நாரை வகைகளால் சென்னை நீர்நிலைகள் அழகாக காட்சியளிக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் தமிழகம் வருகின்றன. இந்த ஆண்டும் பறவைகள் வரத் தொடங்கிவிட்டன. இந்த முறை இவைகள் சென்னையை நோக்கி படையெடுத்துள்ளன. குறிப்பாக வண்டலூர், போரூர், அடையாறு போன்ற இடங்கள் பறவைகளுக்கு முக்கிய தங்குமிடங்களாக மாறியுள்ளன.

குளிர்காலத்தில் வடநாடுகளில் பனி அதிகமாக இருக்கும். அங்கு உணவு கிடைக்காது, குளிரும் தாங்க முடியாது. அதனால் பறவைகள் சூடான இடங்களை தேடி வருகின்றன. நம் ஊரில் குளிர்காலத்திலும் சூடு இருக்கும், ஏரிகளில் மீன்களும் நீரும் இருக்கும். அதனால் இங்கே வந்து சில மாதங்கள் தங்கி மீண்டும் தங்கள் ஊருக்கு செல்கின்றன. அதன்படி, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் இருக்கும் ஒட்டேரி ஏரியில் இந்த ஆண்டு பறவைகள் சீக்கிரமாகவே வரத் தொடங்கிவிட்டன. வெள்ளை கொக்குகள், சாம்பல் நிற பெரிய கொக்குகள், நாரைகள் ஏற்கனவே வந்து கூடு கட்ட இடம் பார்த்து வருகின்றன.

இன்னும் சில நாட்களில் வண்ண நாரைகள், நீர்காகங்கள் வரும். மொத்தம் சுமார் 3,500 பறவைகள் இங்கு வரும். மழைக்குப் பிறகு ஏரியில் நல்ல நீர் இருப்பதால் இந்த ஆண்டு 5,000க்கும் மேல் பறவைகள் வந்துள்ளன. ஏரியை சுத்தம் செய்து, சேற்றை அகற்றியதால் நீர்நிலை நன்றாக இருக்கிறது. வண்ண நாரைகள் பொதுவாக ஜனவரியில் தாமதமாக வரும். அவை ஏப்ரல் வரை இங்கேயே இருக்கும்.

நாட்டாமிகள் அடிக்கடி வந்தாலும் இங்கு குஞ்சு பொரிப்பதில்லை என வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போரூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் உயரமான மரங்கள் நிறைய உள்ளன. அந்த மரங்களில் நிறைய பறவைகள் வந்து தங்குகின்றன. ஆனால் இது கல்லூரி வளாகம் என்பதால் பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாது. கல்லூரியில் படிப்பவர்களும் வேலை செய்பவர்களும் மட்டுமே பார்க்க முடியும்.

குறிப்பாக சென்னையில் உள்ள நீர்நிலைகளையும் சென்னை மாநகராட்சி சரியான நேரத்தில் தூர்வாரி சுத்தம் செய்துள்ளது. அடையாறு ஆற்றையும் சுத்தம் செய்து தூர்வாரியுள்ளது. இதனால் ஏரிகளிலும் ஆற்றிலும் நீர் நிலை நன்றாக உள்ளது. மழைநீர் சரியாக தங்குகிறது. இந்த வேலை காரணமாக இந்த ஆண்டு பறவைகள் வருகை நிறைய அதிகரித்துள்ளது. அடையாறு ஆற்றிலும் பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. ஏரிகளிலும் ஆற்றிலும் மீன்களும் நீரும் இருப்பதால் பறவைகள் வசதியாக தங்கி உணவு தேடுகின்றன. இப்படி பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் நீர்நிலைகள் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது.

சென்னை நகரம் வேகமாக வளர்கிறது. பழைய குளங்களும் ஏரிகளும் நிரப்பப்பட்டு வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் பறவைகளுக்கு தங்க இடம் குறைந்து வருகிறது. இப்படி நகரத்துக்குள் இருக்கும் ஏரிகளையும் குளங்களையும் பாதுகாத்து, சுத்தம் செய்தால், பறவைகளுக்கு புதிய இடங்கள் கிடைக்கும். மக்களும் அரசும் சேர்ந்து முயற்சி எடுத்தால், நகரத்திலேயே பறவைகளுக்கு நல்ல இடம் உருவாக்க முடியும் என்பதை இந்த நீர்நிலைகள் காட்டுகின்றன. வண்டலூர், போரூர், அடையாறு போன்ற இடங்களை பார்க்க மக்கள் தொடர்ந்து வருகின்றனர். குழந்தைகளுக்கு பறவைகளை காட்ட நல்ல வாய்ப்பாக இந்த சீசன் மாறியுள்ளது.