ரசாயனத்திற்கு மாற்றாக செயல்படும் உயிரிப் பூச்சிக்கொல்லிகள் குறித்த அறிமுகத்தை கடந்த இதழில் கண்டோம். உயிரிப் பூச்சிக்கொல்லிகளின் வகைகள், பயன்பாடுகள் குறித்து இன்னும் விரிவாக பார்ப்போம். கடந்த 10 ஆண்டுகளில் உயிரிப் பூச்சிக்கொல்லி உபயோகத்தினால் அநேக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டிரைக்கோடெர்மா, டிரைக்கோகிரம்மா, என்பிவி போன்றவை அதிகரித்துள்ளது. இந்தியாவில் அநேக இடங்களில் உயிரிப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். உண்ணிச்செடியினைக் கட்டுப்படுத்த டீலோநீமா என்றப் பூச்சியை பயன்படுத்தி வருகின்றனர். கரும்பில் பைரில்லாவை கட்டுப்படுத்த, எப்பிகார்நியா மெலனோலுக்கா மற்றும் டெட்ராஸ்டிக்டஸ் பைரில்லா ஆகிய இயற்கை எதிரிகளை உபயோகித்து வெற்றிக் கண்டுள்ளனர்.டிரைக்கோகிரம்மா, கரும்பு துளைப்பானின் முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தி தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வெற்றி கண்டுள்ளனர். பருத்திக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த, டிரைக்கோ கிரம்மா, பிரகான், கைலோனிஸ் மற்றும் கிரைசோபாவையும், நெல்லில் தண்டு துளைப்பான் மற்றும் இலைச்சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த டிரைக்கோகிரம்மாவையும் பயன்படுத்தப்படுகிறது. கரும்பில் செதில் பூச்சியைக் கட்டுப்படுத்த, காக்சிநெல்லிட் வண்டினை உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காள மாநிலங்களில் பயன்படுத்துகின்றனர்.
வர்த்தக ரீதியான உற்பத்திக்கான வாய்ப்புகள்
இந்தியாவில் மொத்தம் 140 உற்பத்தி மையங்கள் இருந்த போதிலும், அதன் உற்பத்தித்திறனை சுமார் ஒரு சதவிகித நிலத்திற்கு மட்டுமே உபயோகிக்க முடியும். இதனால் உற்பத்திக்கும், தேவைக்குமிடையே அதிக இடைவெளி நிலவுகின்றது. எனவே பெரிய அளவில் முதலீடு செய்து தனியார் நிறுவனங்களின் பங்கை அதிகரிக்க வேண்டும்.டிரைக்கோடெர்மாவை சில உள்ளூர் சிறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகின்றன. டிரைக்கோடெர்மா விரிடி (பூஞ்சாண நோய்க் கட்டுப்படுத்த) மற்றும் டிரைக்கோகிரம்மா (கரும்பில் தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்த) ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் தேவையை சந்திக்க, உற்பத்தியை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
உற்பத்தி மையம் எப்படி இருக்க வேண்டும்?
வெற்றிகரமான மையம் அமைக்க, நல்ல சீதோஷ்ண நிலையுள்ள இடங்களில் ஆரம்பிக்க வேண்டும். உயிரிப் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்க கட்டுப்பாடான சூழ்நிலை தேவை. இதனுடன் சந்தைப்படுத்தும் வாய்ப்புள்ள இடங்களைப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அதே சமயம் உற்பத்தி மையங்களை கால் மைல் தூரம் விளைநிலங்களிலிருந்து தள்ளி அமைக்கவேண்டும். காற்றிலுள்ள மாசுப் பொருட்களும், உயிரிப் பூச்சிக்கொல்லி உற்பத்தியைப் பாதிப்பதால், தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப்புறங்களிலிருந்து தூரமாக அமைக்க வேண்டும்.
உற்பத்தி செயல்முறைகுறிப்புகள்
1. டிரைக்கோடெர்மா (முட்டை ஒட்டுண்ணி), சேமிப்புத் தானியப் பூச்சியினை வைத்து இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதில் சோளம் தானியத்திலுள்ள பூச்சியினை வைத்து டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணியை பெருக்கம் செய்யப்படுகிறது. பிறகு முட்டைகளை அட்டையில் ஒட்டி “டிரைக்கோ அட்டை” வினியோகப்படுகிறது. இது கரும்பு தண்டு துளைப்பான், பருத்தி காய்ப்புழு மற்றும் சோளம் தண்டு துளைப்பான் ஆகியவற்றை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
2. கிரைசோபா கார்நியா (கிரைசோபிட் இரை விழுங்கி) சேமிப்பு தானியப் பூச்சிகளை உபயோகித்து ஆய்வகத்தில் இனப்பெருக்கம் செய்யலாம். இவை காய்கறி / பழம் மற்றும் பயறுவகைப் பயிர்களிலுள்ள புழுக்களை கட்டுப்படுத்தும்.
3. பொறிவண்டுகளை பூசணிக்காயிலிருந்து இனப்பெருக்கம் செய்யலாம். இதன் மூலம் மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
4. செயற்கை உணவைப் பயன்படுத்தி, காய்ப்புழு மற்றும் புகையிலைப் புழுவை உற்பத்தி செய்யலாம். பின்னர் என்பி வைரசை, உற்பத்தி செய்த புழுக்களின் மீது தடவி, வைரசை அதிகரிக்கச் செய்யலாம். பின்பு வைரசை புழுக்களிலிருந்து பிழிந்து வடிகட்டி பிரித்தெடுக்க வேண்டும். இதை பருத்தி காய்ப்புழு மற்றும் மற்ற காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
5. டிரைக்கோடெர்மா இது ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. பயறுவகைப் பயிர்களில் சேர் அழுகல் மற்றும் வாடல் நோய்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
6. கவர்ச்சி ஊக்கிகள் இனக்கவர்ச்சி ஊக்கிகளை, நெகிழிப் பொறிகளில் வைத்து காய்ப்புழு மற்றும் புகையிலைப் புழுக்களின் ஆண் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கலாம்.
மேற்கூறிய தொழில்நுட்பங்கள் யாவும் பாரம்பரிய முறையிலானவை. ஐசிஏஆர் நிறுவனமும், மாநில வேளாண் பல்கலைக்கழகங்களும் சில உற்பத்தி முறைகளை நிர்ணயம் செய்துள்ளன.
(உயிரி பூச்சிகள் குறித்த தகவல்கள் அடுத்த இதழிலும் தொடரும்)