பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் இத்தாலி மகளிர் அணி மீண்டும் சாம்பியன்: ஜெஸிகாவை வீழ்த்தி ஜாஸ்மின் அசத்தல்
ஷென்ஜென்: பில்லி ஜீன் கிங் கோப்பை போட்டியில் இத்தாலி மகளிர் அணி, அமெரிக்க அணியை வென்று சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக மீண்டும் கைப்பற்றி உள்ளது. சர்வதேச மகளிர் டென்னிஸ் அணிகளுக்கான போட்டிகளில் வெல்லும் அணிக்கு, பில்லி ஜீன் கிங் கோப்பை வழங்கப்படுகிறது. இதன் இறுதிப் போட்டியில் அமெரிக்கா மகளிர் அணியும், நடப்பு சாம்பியன் இத்தாலி மகளிர் அணியும் மோதின. இத்தாலியின் எலிசபெட்டா கோசியரெட்டோ - அமெரிக்க வீராங்கனை எம்மா நவரோ இடையே நடந்த போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எலிசபெட்டா அபார வெற்றி பெற்றார். தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினியும், அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலாவும் மோதினர்.
துவக்கம் முதல் அதிரடியாக ஆடிய ஜாஸ்மின், 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜெஸிகாவை வெற்றி வாகை சூடினார். மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் இத்தாலி வீராங்கனைகள் ஜாஸ்மின் பவோலினி, சாரா எரானி இணை சிறப்பாக செயல்பட்டது. பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பான வெற்றிகளை குவித்த இத்தாலி அணி, பில்லி ஜீன் கிங் கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது. பில்லி ஜீன் கோப்பை போட்டிகளில் அமெரிக்க அணி வலுவான ஒன்றாக திகழ்ந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளில், அமெரிக்க அணி, 18 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதன் ஆதிக்கத்தை இத்தாலி வீராங்கனைகள் தகர்த்து காட்டியுள்ளனர்.