மசோதாக்களை நீண்ட நாட்களாக கிடப்பில் போட கவர்னருக்கு அதிகாரம் இல்லை: ஜனாதிபதியின் 14 கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம்
* ஒப்புதல் தர காலக்கெடு விதிக்க முடியாது
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே முழு அதிகாரம்
புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை நீண்ட நாட்கள் கிடப்பில் போட ஆளுநர்களுக்கு அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு விளக்கம் அளித்த நீதிபதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிக அதிகாரம் என்றும் இரண்டு அதிகார அமைப்புகள் இருக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மசோதாக்களுககு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு நீதிமன்றத்தால் காலக்கெடு விதிக்கமுடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து அனைத்து விவகாரத்திலும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம், மற்றும் துணைவேந்தர் நியமனம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மூன்று வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தும் இருந்த பத்து மசோதாக்களுக்கு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி ஒப்புதல் வழங்கி தீர்ப்பளித்தது.
மேலும், மசோதா குறித்து 3 மாதத்துக்குள் கவர்னர், ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் காலக்கெடு விதித்தனர். இதைத்தொடர்ந்து ஆளுநர்களுக்கும், ஜனாதிபதிக்கும் உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு, சுமார் 14 கேள்விகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து குடியரசுத் தலைவர் கேள்வி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூரியகாந்த் ,விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஏ.எஸ். சந்துருகர் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பத்து நாட்கள் விரிவாக விசாரணை நடத்தியது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஒத்திவைத்திருந்தனர்.
இதையடுத்து மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபடி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூரியகாந்த் ,விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஏ.எஸ். சந்துருகர் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் முதல் பிரச்னை, மசோதா மீது ஆளுநர் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என்பது ஆகும். ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டவுடன் அதன் மீது முடிவெடுக்க நான்கு விருப்பங்களை அவருக்கு வழங்குகிறது என ஒன்றிய அரசு தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநிலங்களின் தரப்பில், ‘‘மூன்று வாய்ப்புகள் மட்டும் தான் ஆளுநருக்கு இருக்கிறது. அதில்,’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பலாம் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பலாம். அதேப்போன்று இரண்டாவது முறை அனுப்பி வைக்கப்படும் மசோதாவுக்கு ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கூறப்பட்டது. மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது..
இந்தியாவின் கூட்டாட்சியில், ஆளுநர்கள் ஒரு மசோதா தொடர்பாக அவையுடனான வேறுபாடுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக்கூடாது. அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு கூறுவது போன்று நான்காவது வாய்ப்பு இல்லை. அரசியல் சாசன பிரிவு 200 மற்றும் 201ன் படி ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் மசோதாக்கள் குறித்து முடிவு எடுத்தாக வேண்டும். முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
மேலும் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கோ அல்லது மறுபரிசீலனைக்காக மசோதாவை நிறுத்தி வைக்கவோ, திருப்பி அனுப்புவதற்கோ ஆளுநர் அதிகாரம் பெறுகிறார். அதேப்போன்று ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால், அதை சட்டப்பேரவைக்கு அவர் அனுப்பி வைக்கிறார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அவர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தால், அதை கட்டாயமாக சட்டமன்றத்திற்கு தகுந்த காரணங்களை சொல்லி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும்.
ஒரு மசோதாவை நிறுத்தி வைக்கும் பொழுது அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்தால் அது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைச்சரவை ஆகியவை தான் மாநிலத்தின் முழு அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்ற கருத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை. இதில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தேர்வு செய்யும்போது, அரசியலமைப்பு காக்கும் விதமாக நீதிமன்றங்கள், நீதித்துறை அதனை மறுஆய்வு செய்யலாம். தகுதியின் அடிப்படையில் எதையும் கவனிக்காமல் செயல்பட ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் வரையறுக்கப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும்.
மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியாது. இருப்பினும், ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. அதை நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும். மேலும் மசோதா விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்பான வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவுகள் அரசியலமைப்பிற்கு எதிரானதாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது. முன்னதாக இந்த விவகாரத்தில் கெடு விதித்த தீர்ப்பானது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். சிறப்பு விதி 142 அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. மசோதா விவகாரத்தில் ஆளுநரை மட்டும் பொறுப்பாக்க முடியாது. இருப்பின் விதி 143ன் மூலம் ஆளுநர் விளக்கம் கேட்க கூடாது. மசோதா விவகாரத்தில் ஒப்புதல் வழங்க ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் காலதாமதம் செய்தால் மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடி முறையிடலாம் என்று உத்தரவிட்டனர்.
* நியாயமான கால வரம்புக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்: தமிழ்நாடு வழக்கறிஞர் பேட்டி
தமிழ்நாடு வழக்கறிஞர் ஹரிஷ் குமார்டெல்லியில் அளித்த பேட்டியில், ‘‘மசோதாவுக்கு ஆளுநர் குறிப்பிட்ட நியாயமான கால வரம்புக்கு உள்ளாக முடிவை எடுக்க வேண்டும். மசோதா மீது ஒப்புதல் கொடுப்பதோ அல்லது திரும்ப அனுப்புவதோ இல்லை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதோ எந்த காரணமாக இருந்தாலும் ஒரு நியாயமான கால வரம்புக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். மசோதா மீது சந்தேகம் இருந்தால் உடனடியாக ஆளுநர் அது தொடர்பாக மாநில அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும் அது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும்.
தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழக்கில் 10 மசோதாக்கு ஒப்புதல் அளித்த இரு நீதிபதிகள் தீர்ப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் அரசியல் சாசனம் ஆளுநருக்கு வழங்கியுள்ள மூன்று வழிமுறைகளைத் தவிர வேறு வழிமுறைகள் அவருக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது. மசோதா தொடர்பாக ஏதாவது பிரச்சனை இருந்தால் மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது’’ என்றார்.
* உச்ச நீதிமன்ற பதில் அதிர்ச்சியளிக்கிறது
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலக்கெடு குறித்த ஜனாதிபதியின் குறிப்புக்கு உச்ச நீதிமன்றம் அளித்த பதில் வருந்தத்தக்கது, அதிர்ச்சியளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ இனிமேல் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு எது என்பதை யார் தீர்மானிப்பார்கள்? நீதித்துறை அதன் அரசியலமைப்பு பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளக்கூடாது’ என்றார்.
தீர்ப்பின் சிறப்பு அம்சங்கள்:
1. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவை நிறுத்தி வைக்கும் போது அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்தால் அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும்
2. மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது
3. நாட்டின் கூட்டாட்சியில் ஆளுநர்கள் ஒரு மசோதா தொடர்பாக அவை உடனான வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டுமே தவிர, இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது
4. அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் சொல்வது போல 4வது வாய்ப்பு இல்லை
5. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது மாநில அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் இல்லையென்றால் அதை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். இவைத்தவிர 4வது வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை.
6. அரசியல் சாசனப் பிரிவு 200 மற்றும் 201-ன் படி ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்
7. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அதன் அமைச்சரவை தான் முதன்மையாக இருக்க வேண்டுமே தவிர மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது
8. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களின் கருத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை
9. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை
10. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட கால அளவிற்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும்
11. மசூதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிப்பது என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள நெளிவு சுளிவுகளுக்கு முரணாக உள்ளது, அதேவேளையில் ஏப்ரல் - 8ல் வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்புக்கு செல்ல விரும்பவில்லை
12. நீதிமன்றங்களால் மசோதக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை விதிக்க முடியாது
13. தமிழ்நாடு அரசு தொடர்பான வழக்கில் ஏப்ரல் 8-ல் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது
14. ஆளுநர்களின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது! இருப்பினும் ஒரு மசோதா காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டிருந்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்
15. மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலம் வரம்புக்குள் முடிவெடுங்கள் என ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது! வேண்டுமென்றால் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும்.


