Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மசோதா மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தால் நீதிமன்றம் தலையிட முழு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு விசாரணை மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதங்களை முன்வைத்தார்.

அதில், ‘‘ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் பிரதிநிதி. ஆளுநருடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்.ஆளுநர் மாநில அமைச்சர்களுக்கு ஒரு வழிகாட்டியாக நண்பராக இருப்பார். எல்லா விவகாரங்களிலும் ஆளுநர், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு ஆகும். ஆளுநர் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்கு பல தீர்வுகள் உள்ளன. அதனை தான் மாநில அரசுகள் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பாக பிரதமர் அல்லது குடியரசுத் தலைவரை சந்தித்துக் கூட மாநில அரசின் பிரதிநிதிகள் முறையிடலாம். தொலைப்பேசி உரையாடல் வாயிலாக கூட முடிவு காண முடியும். அரசியல் முயற்சியால் ஆலோசனைகளின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். நாட்டில் உள்ள பல பிரச்னைகளுக்கு நீதித்துறை ஒன்றே தீர்வு என்று கண்டிப்பாக கிடையாது என்று தெரிவித்தார். இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,” எந்த ஒரு விவகாரத்திலும் ஒரு தவறு நடந்தால் அதற்கு தீர்வு இருக்க வேண்டும். இந்த நீதிமன்றம் அரசியலமைப்பின் ஒரு அங்கம்.

ஒரு அரசியலமைப்புச் சட்டப் பணியாளர் சரியான காரணங்கள் இல்லாமல் பணிகளைச் செய்யவில்லை என்றால், நீதிமன்றமாகிய நாங்கள் சக்தியற்றவர்கள் என்றும், எங்களது கைகள் கட்டப்பட்டுள்ளது எனவும் கூற வேண்டுமா?. கண்டிப்பாக அப்படி இருக்க முடியாது. குறிப்பாக காலக்கெடு இல்லையென்றால், ஏதாவது ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். எவ்வளவு காலத்திற்கு மசோதா மீது முடிவெடுக்காமல் இருக்க முடியும். இங்கு எழும் கேள்வியே மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் கால வரம்பின்றி கிடப்பில் போடுவது தான், அவ்வாறு ஆளுநர் நிரந்தரமாக ஒரு மசோதாவை கிடப்பில் போடுவது என்றால் அதற்கான தீர்வு என்ன? என்று கேள்வியெழுப்பினர்.

இதைத்தொடர்ந்து அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா,” மசோதா மீது மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்ற காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயம் செய்ய முடியாது.ஆளுநர் குடியரசு தலைவர் அரசுகள் ஆகியவற்றின் அதிகார பிரிப்பு என்பது அரசியல் சாசனத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று ஆகும்.ஒரு ஆளுநர் ஒரு மசோதாவின் மீது எடுத்த முடிவை நீதிமன்றம் விசாரணை செய்ய முடியாது அதை அரசியல் சாசன சட்டப்பிரிவு 163 தடை செய்கிறது ஏனென்றால் அரசியல் சாசனப் பிரிவு 200ன் கீழ் ஒரு மசோதாவின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆளுநர் ஒரு மசோதாவை ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போடுவார் என்றால் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர் நாட்டின் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவரை அணுகி இது தொடர்பாக முறையிட்டை வைக்கலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘மசோதா மீது ஆளுநர் நீண்ட காலம் முடிவெடுக்காமல் இருந்தால், அது நீதி துறையின் விசாரணை எல்லைக்கு அப்பாற்பட்ட விவகாரமா?. ஆளுநருக்கு அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு எல்லையில்லாத அதிகாரம் இருக்கிறது என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாதுகாப்பது யார்.

ஆளுநருக்கு அரசியலமைப்பு பிரிவு 200ம் படி எல்லையற்ற அதிகாரம் இருக்கிறது என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயலற்றதாகி விடாதா.மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருந்தாலும் அவர்கள் செயல்படவில்லை என்றால், நீதிமன்றத்துக்கு தலையிட அதிகாரம் கிடையாதா. தகுதியான ஒரு சட்டத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தால் அதில் தலையிட நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உண்டு. விதிகளின் படி ஆளுநர் செயல்படவில்லை என்றால், அது சட்டமன்றத்தை முழுமையாக செயலிழக்க செய்யும். அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

இதையடுத்து துஷார் மேத்தா, ‘‘தமிழ்நாடு அரசு வழ்ககு விவகாரத்தில் உச்ச நீதிமன்றமானது மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. குறிப்பாக அரசிதழில் அதுதொடர்பான அறிவிப்பு வெளியான போது உச்ச நீதிமன்றம் மசோதாவை சட்டமாக்கி உத்தரவு பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீதித்துறையானது நிர்வாக ரீதியிலான விவகாரத்திலும், நீதி குழுவின் அதிகார விவகாரத்திலும் தலையிட்டதாகத்தான் பார்க்க முடியும். அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு நமது ஜனநாயகம் வழி வகுத்துள்ளது எனவே ஒவ்வொரு முறையும் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி அரசியல் சாசன பிரிவு 32 கீழ் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியது இல்லை.

அதேவேளையில் எடுத்துக்காட்டாக, ஒரு நபர் 7 ஆண்டுகளாக தன்னுடைய வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையிலே இருந்து கொண்டிருக்கின்றது, ஆனால் வழக்கில் அதிகபட்சமான தண்டனையே 7 ஆண்டுகள் தான் எனவே என்னை விடுவிக்க வேண்டும் எனக்கூறி குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட்டால், குடியரசுத் தலைவர் அவரை வழக்கிலிருந்து இருந்து விடுதலை செய்து விட முடியுமா ?அப்படித்தான் மசோதா விவகாரத்திலும் எங்கு முறையிட வேண்டுமோ அங்குதான் சென்று மசோதா ஒப்புதல் தொடர்பாக பேச வேண்டுமே தவிர அனைத்திற்கும் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணக்கூடாது, அவரவர் எல்லையில் அதற்கான தீர்வை தேட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து குறுக்கிட்டு கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி,”நான்கு ஆண்டுகளாக மசோதா கிடப்பில் போடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாமல் இருந்ததே, அதனை என்னவென்று கூறுவது. இவ்வாறு மசோதாக்கள் அரசின் முடிவுகள் ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பிலேயே போடப்பட்டால் நிர்வாகம் எவ்வாறு இயங்கும். குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனுவில், ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான பிரச்சனைகளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பதற்கு அரசியலமைப்பின் பிரிவு 131-ன் கீழ் சூட் வழக்குத் தொடருவதைத் தவிர வேறு வழிமுறை இல்லையா? அவ்வாறு பிரச்சனைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றத்தின் வேறு அதிகார வரம்பை அரசியலமைப்பு தடை செய்கிறதா.

மாநில ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்காகவோ அல்லது வேறு முடிவுக்காகவோ ஒதுக்கும்போது அதுதொடர்பாக அரசியல்சாசன பிரிவு 143ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா? என்ற இந்தக் கேள்விக்கு பதில் வேண்டுமெனில் நாம் தற்போதைய பணிகளை நிறுத்திவிட்டு பெரிய அரசியல் சாசன அமர்வு அமைத்து, பிரிவு 143ன் உட்பிரிவு 5ன் கீழ் குடியரசு தலைவருக்கு ஆலோசனை வழங்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘இந்த கேள்விக்கான விளக்கத்தை அல்லது விடையை உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டுமா என்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் உரிய விளக்கத்தை கேட்டு தெரிவிப்பதாக பதிலளித்தார். இதையடுத்து வழக்கு வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.