Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு புதிய விசா கட்டணம் குறித்து பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு: அமெரிக்க முன்னாள் தூதர் கருத்து

வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என அமெரிக்க முன்னாள் தூதர் கூறியுள்ளது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், புதிய எச்1பி விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக (சுமார் ரூ.88 லட்சம்) உயர்த்தி சமீபத்தில் உத்தரவிட்டார். கடந்த 21ம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த அறிவிப்பு, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக, இந்த விசாக்களுக்கான கட்டணம் 2,000 முதல் 5,000 டாலர் வரை மட்டுமே இருந்தது. இது ஆண்டு கட்டணம் என முதலில் கூறப்பட்ட நிலையில், புதிய விண்ணப்பதாரர்களுக்கு இது ஒருமுறை மட்டுமே வசூலிக்கப்படும் கட்டணம் என வெள்ளை மாளிகை பின்னர் தெளிவுபடுத்தியது. இந்த கட்டண உயர்வு மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கவலை தெரிவித்திருந்தது.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கவே, இந்தியப் பொருட்கள் மீது 50% வரியுடன் இந்த விசா கட்டண உயர்வையும் அமெரிக்கா தந்திரமாக பயன்படுத்துவதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் டிம் ரோமர், இந்த விசா கட்டண உயர்வு குறித்து புதிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன், இந்த விசா கட்டண உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. இந்த கட்டண உயர்வு இருதரப்பு உறவில் தற்காலிக சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களுக்கு எச்1பி விசாக்களை அனுமதிப்பது அமெரிக்காவுக்கும் நன்மை பயக்கும். ஏனெனில், உயர் பட்டப்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறும் இந்த திறமையான தொழில் வல்லுநர்கள், ஆயிரக்கணக்கான அமெரிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றனர்’ என்றார்.

* மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க டிரம்ப் பரிசீலனை

அமெரிக்க அதிபரின் புதிய விசா கட்டண விதிக்கு அமெரிக்க மருத்துவ சங்கம் உள்ளிட்ட முக்கிய மருத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த அதீத கட்டணத்தால் மருத்துவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவது பாதிக்கப்பட்டால், அமெரிக்கா முழுவதும் குறிப்பாக கிராமப்புறங்களில் கடுமையான மருத்துவர் பற்றாக்குறை ஏற்படும் என அவை எச்சரித்தன. இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறுகையில், ‘தேசிய நலன் கருதி சிலருக்கு விலக்கு அளிக்க இந்த உத்தரவில் இடமுள்ளது. அதன்படி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பயிற்சியாளர்கள் உட்பட தகுதியானவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டார். இருப்பினும், இந்த விலக்கு ஒட்டுமொத்த மருத்துவத் துறைக்குமானதா அல்லது ஒவ்வொரு மருத்துவரும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா என்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.