மாஸ்கோ: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார். ரஷ்யாவிடமிருந்து அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத வரி விதித்துள்ளது. மேலும், உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் தரவே இந்தியாவுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறி உள்ளது. இந்த சூழலில், ரஷ்யா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார்.
இதில், இரு தரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா எதிர்த்தாலும் இந்தியாவுக்கு தொடர்ந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படும் என ரஷ்யா கூறியிருக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. மேலும், வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் புடின் இந்திய பயணம் மேற்கொள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடாக ஜெய்சங்கர் அவரை சந்தித்து பேசி உள்ளார்.