கடலூர்: கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் மனோகர்(54). இவர் வண்டிப்பாளையம் சிங்கார முதலியார் தெருவில் உள்ள பாலன் (74) என்பவருக்கு சொந்தமான கைத்தறியில் நெசவாளராக பணியாற்றி வந்தார். தனது பைக்கை தறிக்கு எதிரே வசிக்கும் பொம்மை வேலை செய்யும் கார்த்திகேயன் என்பவர் வீட்டின் அருகே நிறுத்துவது வழக்கம். இதனால் மனோகருக்கும் கார்த்திகேயனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை பைக் பார்க்கிங் தொடர்பாக மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது கார்த்திகேயன் தரப்பை சேர்ந்த கந்தன், அவரது மனைவி மீனா ஆகியோர் சேர்ந்து மனோகரை கல்லால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மனோகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து தம்பதியை பிடித்து விசாரிக்கின்றனர்.