பைக்கில் லிப்ட் தருவதாக கூறி மூதாட்டியிடம் கைவரிசை விஜய் மாநாடு கடனை அடைக்க நகை பறித்த தவெக நிர்வாகி கைது
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வெட்டியாந்தொழுவம் பகுதியில் உள்ள எம்பி தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி மலர் (60). இவர் சென்னையில் உள்ள மகன் ஜெயபால் வீட்டிற்கு சென்று, கடந்த 10ம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். பஸ்சில் வந்த அவர், அப்பந்தாங்கல் கூட்ரோட்டில் இறங்கி வீட்டிற்கு ஒண்டிகுடிசை சாலையில் நடந்து சென்றார். அப்போது, ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்த வாலிபர், லிப்ட் தருவதாக கூறி பைக்கில் ஏற்றிச்சென்றார். ஒண்டிகுடிசை பாக்கு தோப்பு அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றபோது, பைக்கை நிறுத்தி பெட்ரோல் போட்டு வருவதாக கூறினார். பின்னர் மூதாட்டி மலர் நடந்துசென்றபோது, அந்த பைக் ஆசாமி, மூதாட்டியை தாக்கி கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார்.
இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பைக் ஆசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் ஆரணி தாலுகா போலீசார் ஆரணி-இரும்பேடு கூட்ரோடு அருகே கடந்த 16ம் தேதி இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே தென்நந்தியாலம் பாடசாலை தெருவை சேர்ந்த கவுதம்(30) என்பதும், மூதாட்டி மலரிடம் லிப்ட் தருவதாக கூறி 3 சவரன் செயினை பறித்தவர் எனவும் தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், தவெகவின் ஆற்காடு மேற்கு ஒன்றிய நிர்வாகியான இவர், கடந்த மாதம் 21ம்தேதி மதுரையில் நடந்த கட்சி மாநாட்டிற்கு நிர்வாகிகளை காரில் அழைத்துச்சென்றுள்ளார். இதனால் அவருக்கு கடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஸ்டீல் கடையில் வேலை செய்யும் அவர், கடைக்கு வரவேண்டிய பணத்தை வசூலிக்க ஆரணி அருகே உள்ள கிராமத்திற்கு பைக்கில் சென்றபோதுதான் மூதாட்டி அணிந்திருந்த நகையை பார்த்து லிப்ட் தருவதாக கூறி அழைத்துச்சென்று தாக்கி செயின் பறித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து நேற்றுமுன்தினம் கவுதமை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.