பீகார் தேர்தல் களத்தில் பரபரப்பு; காங்கிரஸ் செயற்குழுவில் ஒன்றிய அரசுக்கு கண்டனம்: ராகுல், கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் வியூகம் மற்றும் வாக்குத் திருட்டு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பாட்னாவில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் ‘வாக்குத் திருட்டு’ நடப்பதாகக் குற்றம்சாட்டி 1,300 கிலோமீட்டர் தூரம் ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ மேற்கொண்டார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று பீகாரின் தலைநகர் பாட்னாவில் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பது முக்கிய நோக்கமாக உள்ளது. குறிப்பாக, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மையப்படுத்தி, ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுக்கு எதிராக வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்கள் மீது விதித்துள்ள வரிகள், நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலையின்மை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை தோல்விகள் உள்ளிட்ட தேசிய பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், ‘பீகாருக்கு மாற்றம் தேவை’ என்று குறிப்பிட்டார். மற்றொரு தலைவரான வீரப்ப மொய்லி, ‘முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிரான அதிருப்தி அலை வீசுகிறது’ என்றார். மேலும், வரவிருக்கும் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால், பீகாரின் நிர்வாகக் கட்டமைப்பு முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும் என்ற உறுதியான வாக்குறுதியை அளிக்கும் வகையிலும் செயற்குழுவின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.