பீகார் தேர்தலில் படுதோல்வி எதிரொலி; அரசியலை விட்டு விலகுகிறாரா பிரசாந்த் கிஷோர்: கட்சியை மொத்தமாக கலைத்ததால் பரபரப்பு
புதுடெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பிரசாந்த் கிஷோர், கட்சியை மொத்தமாக கலைத்துள்ளார். இதனால் அவர் அரசியலை விட்டு விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.பீகார் மாநிலத்தில் சமீபத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 123 இடங்களில் வென்றால் எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கலாம். ஆனால் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜ கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜ 89 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறியது.
இந்த தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. கடந்த பல ஆண்டுகளாக பிரசாந்த் கிஷோர், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார். 2021 சட்டசபை தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து பணியாற்றினார். இதையடுத்து திமுக வென்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து பீகாரில் பிரசாந்த் கிஷோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜன்சுராஜ் கட்சியை தொடங்கினார். பீகார் சொந்த மாநிலம் என்பதால் எப்படியாவது வென்று விடலாம் என தீவிரமாக மக்களை சந்தித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தினார். கிராமம் கிராமமாக நடந்து சென்றார். அவர் செல்லும் இடங்களில் கூட்டம் கூடியது. ஆனால் அந்த கூட்டம் ஓட்டாக மாறவில்லை.
நடந்து முடிந்த தேர்தலில் ஜன்சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக 243 தொகுதிகளில் 238 இடங்களில் பிரசாந்த் கிஷோர் வேட்பாளர்களை அறிவித்தார். இதில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. அவரது கட்சி 3.4 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. 236 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இது பிரசாந்த் கிஷோருக்கு மனவருத்தத்தை அளித்துள்ளது. இந்நிலையில்தான் அவர் கட்சியின் அமைப்பு சார்ந்த அனைத்து பிரிவுகளையும் மொத்தமாக கலைத்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் சையத் மாஷிக் உதின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜன்சுராஜ் கட்சியின் அமைப்பு சார்ந்த அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து முதல் மாநில அளவிலான அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஒன்றரை மாதங்களில் மீண்டும் இந்த அமைப்பு சார்ந்த அனைத்து பிரிவுகளும் மீண்டும் தொடங்கப்படும்’ என்றார். பீகார் தலைநகர் பாட்னாவில் ஜன்சுராஜ் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் கட்சியின் மாநில தலைவர் மனோஜ் பாரதி தலைமையில் நடந்தது. இதை தொடர்ந்துதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பிரசாந்த் கிஷோர் அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் அவர் கட்சி சார்பில் கலைக்கப்படும் அனைத்து அமைப்புகளை ஒன்றரை மாதத்தில் மீண்டும் உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரசாந்த் கிஷோரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது ஒன்றரை மாதங்களுக்கு பிறகுதான் தெரிய
வரும்.


