பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. பீகாரில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. முதல் கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
