ஷேக்புரா: பீகாரில் ஒரு நாள் ஓய்வுக்கு பின் வாக்காளர் அதிகார யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதனை கண்டித்தும், வாக்கு திருட்டு நடைபெறுவதாக கூறியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஞாயிறன்று தொடங்கிய இந்த யாத்திரையானது 16 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பின் நேற்று யாத்திரை மீண்டும் தொடங்கியது. ஷேக்புரா மாவட்டத்தில் யாத்திரை தொடங்கப்பட்டது. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ(எம்எல்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் விகாஷீல் இன்சான் கட்சியின் தலைவர் முகேஷ் சாஹ்னி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
* போலீஸ்காரர் மீது ராகுல் வாகனம் மோதியது
பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டு வரும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று நவாடா வந்தார். நகரில் உள்ள பகத் சிங் சந்திப்பு பகுதியில் அவரது வாகனம் வந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ராகுலின் வாகனத்தின் முன் விழுந்து விட்டார். இதில் வாகனத்தின் சக்கரம் கால் மீது ஏறியது. முதலில் காவலருக்கு தண்ணீரை கொடுத்த ராகுல் காந்தி பின்னர் தனது வாகனத்தில் அழைத்து சென்றார். இந்த சம்பவத்தை தொடர்ந்து வாகனத்தின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.