பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தேர்தல் ஆணையம் மீது ராகுல் குற்றச்சாட்டு: பாஜவுடன் கைகோர்த்து அதிகாரிகளே படிவங்களை நிரப்பும் அவலம்
புதுடெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜவுடன் கைகோர்த்து தேர்தல் ஆணையம் செயல்படுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மேலும், வாக்காளர்களுக்கு பதிலாக தேர்தல் அதிகாரிகளே விண்ணப்ப படிவங்களை நிரப்பி கையெழுத்திட்டு பெரிய அளவில் மோசடி நடப்பதாகவும் வீடியோ ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.
இதையொட்டி, கடந்த மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இப்பணியால், வாக்காளர் பட்டியலில் உள்ள தகுதியவற்றவர்கள் பெயர் நீக்கப்படும், சட்டவிரோதமாக இடம் பெற்றுள்ள வெளிநாட்டவர்களின் வாக்குரிமை பறிக்கப்படும், தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
ஆனால் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் தகுதியான பல கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை நிரூபிக்க பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல ஆவணங்களை தர வேண்டுமென்பதும் சர்ச்சையாகி உள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
வரும் 25ம் தேதியோடு வாக்காளர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தருவதற்கான காலக்கெடு முடியவடைய உள்ள நிலையில், தற்போது 88.65 சதவீத வாக்காளர்கள் (7 கோடி பேர்) விண்ணப்ப படிவங்களை வழங்கி விட்டதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இதில், 35.69 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
இதன் மூலம், முதற்கட்டமாக 35 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்கப் போவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், அஜித் அன்ஜூம் என்ற யூடியூபர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பூத் நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஒரு அரசு ஊழியர் பேசுகிறார். அவர், காலக்கெடு முடிவதற்கு முன்பாக விண்ணப்ப படிவங்களை பெற வேண்டும் என்பதால் வாக்காளர்களுக்கு பதிலாக பூத் அதிகாரிகளே விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு தர தங்களுக்கு உத்தரவு வந்திருப்பதாக கூறுகிறார்.
இதன் மூலம் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி நடப்பதாகவும், இதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லுமா? என அஜித் அன்ஜூம் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அஜித் அன்ஜூமின் பதிவை தனது எக்ஸ் தளத்தில் இணைத்து பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
பீகார் சட்ட பேரவை தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் தேர்தல் ஆணையம் மோசடி செய்கிறது. வாக்காளர்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடும் போது கையும் களவுமாக சிக்கியுள்ளது. பணியின் பெயர் சிறப்பு தீவிர திருத்தம். ஆனால் நடப்பது வெறும் திருட்டு. இந்த முறைகேட்டை வெளிக்கொண்டு வருபவர்கள் மீது வழக்கு பதியப்படும். ஆங்கிலத்தில் ஈ.சி என்று அழைக்கப்படும் தேர்தல் ஆணையம் பாஜவின் தேர்தல் திருட்டு பிரிவாக முழுமையாக மாறி விட்டதா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், பீகார் சிறப்பு திருத்தத்தில் மிக பெரிய மோசடிகள் நடப்பதாக தகவல்கள் வந்துள்ளன. தேர்தல் ஆணையம் யாருக்காக பணியாற்றுகிறது. எந்த நோக்கத்திற்காக தேர்தல் ஆணையம் பணியாற்றுகிறது.இதற்கு முன்பும் அரசியல் சட்டத்தை நசுக்க நடந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதே போல் இப்போதும் முறியடிக்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பீகார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையம் பாஜ கட்சியின் ஒரு பிரிவாகவே மாறிவிட்டது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அறிவுறுத்தியபடி தேர்தல் ஆணையம் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக 15 சதவீதம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க பாஜ தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக எங்களுக்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர்.
கடந்த 15 நாட்கள் வரையிலும் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் பூத் நிலை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. முகவரியில் இல்லை என கூறப்படும் 35 லட்சம் பேரும் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்திருக்கலாம். வேறு முகவரியில் வசித்து வரலாம். வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கக் கூடாது ’’ என கூறி உள்ளார். இந்த விவகாரம் பரபரப்பாகி உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நாளை நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
* பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் வாக்குரிமையை நிரூபிக்க வேண்டிய கணக்கெடுப்பு படிவத்தை மக்கள் பூர்த்தி செய்து வரும் 25ம் தேதிக்குள் தர வேண்டும்.
* அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர், வாக்காளர்கள் வழங்கும் ஆவணங்களை ஆய்வு செய்து செப்டம்பரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
* 22 ஆண்டுக்குப் பிறகு நடக்கும் இந்த தீவிர திருத்தப் பணிகளை விரைவில் நாடு முழுவதும் நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.