பீகாரில் வாக்காளர் பட்டியலில் எத்தனை பேர் நீக்கப்பட்டனர்? தேர்தல் ஆணையத்துக்கு நேர்மை, தைரியம் இல்லை: காங். விமர்சனம்
புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் பீகாரில் குடிமக்கள் அல்லாத எத்தனை பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளிப்படையாக கூறவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,\\” சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலையீடுகள் பெருமளவில் வாக்குகள் பறிக்கப்படும் என்ற அச்சத்தை போக்கினாலும், துல்லியம், சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் ஆகியவற்றின் பார்வையில் இருந்து இந்த நடைமுறை எதிர்பார்க்கத்தக்கதாக இல்லை.
சிறப்பு தீவிர திருத்த பயிற்சி செயல்முறையானது முழுமை, சமத்துவம் மற்றும் துல்லியம் ஆகிய மூன்று விவகாரங்களிலும் தோல்வியடைந்துள்ளது என்பதை காட்டுகின்றது. வாக்காளர் பட்டியலில் இருந்து எத்தனை குடிமக்கள் அல்லாதவர்கள் நீக்கப்பட்டனர் என்பது குறித்து நாட்டை தெளிவுபடுத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு நேர்மையோ, தைரியமோ இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.