பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முதற்கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. அங்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நவம்பர் 6ல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பிரதமர் மோடி நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி பெண் நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலம் உரையாடினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று அவுரங்காபாத், கயாஜியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், சமஸ்திபூர், பெகுசராய், சஹர்சா, தர்பங்கா, முசாபர்பூர் மற்றும் வைஷாலி மாவட்டங்களில் உள்ள பல்வேறு தொகுதிகளில் 17 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.
பாஜ தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, போஜ்பூர் மற்றும் கயாவில் பிரசாரம் செய்தார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வைஷாலி, பாட்னா, சஹர்சா மற்றும் முங்கர் மாவட்டங்களில் நடக்கும் பிரச்சாரக் கூட்டங்களில் பேசினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தர்பங்கா, கிழக்கு சம்பாரண் மற்றும் மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கயாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார். நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து வெளியூர் நபர்கள் தேர்தல் நடக்கும் 121 தொகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். கொடி ஊர்வலம் நடத்தப்பட்டது. நாளை முதற்கட்டமாக 121 ெதாகுதியிலும் தேர்தல் நடக்கிறது. இதில் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வியாதவ் போட்டியிடும் ராகோபூர் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.
* போலி பட்டம் வைத்திருக்கிறார் மோடி: ராகுல்காந்தி ஆவேசம்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசுகையில்,’ நீங்கள் ரீல்ஸ்கள், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் இவைகளுக்கு அடிமையாக வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். இது 21 ஆம் நூற்றாண்டின் புதிய உச்சம். இளைஞர்கள் திசைதிருப்பப்படுவதை உறுதி செய்வதோடு, கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அவர்களின் பிரச்சினைகளுக்கு தனது அரசாங்கத்தை பொறுப்பேற்க வைக்காமல் இருப்பதற்காக அவர் அத்தகைய சூழ்நிலையை விரும்புகிறார். மோடி போலி பட்டம் வைத்திருக்கிறார். கல்வியின் மீதான அவரது அலட்சியத்திற்கு இதுவே காரணம். பண்டைய காலங்களில், நாளந்தா சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று. அங்கு சீனா, ஜப்பான், கொரியாவிலிருந்து மாணவர்கள் சேர்க்கை கோரி வந்தனர். ஆனால் போலி பட்டம் வைத்திருக்கும் மோடிக்கு இதுபோன்ற விஷயங்களில் எந்த மதிப்பும் இல்லை.
மோடியும், அமித் ஷாவும் பீகாரில் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வெற்றி பெறாது என்பதை அவர்கள் அறிவார்கள். மோடி இங்கு வரும்போதெல்லாம் காட்டு ராஜ்ஜியம் பற்றிப் பேசுகிறார். அது என்ன என்பதை நான் உங்களுக்குச் சொல்வேன். வாக்கு திருட்டை ஊக்குவிக்கும் மோடியால், டெல்லியில் காட்டு ராஜ்ஜியம் கொண்டுவரப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் அரியானாவிலும் அவர் அவ்வாறு செய்துள்ளார். பீகாரிலும் அவர் அதையே செய்ய விரும்புகிறார். ஆனால், பீகார் மக்கள் அவரது திட்டங்களை தோற்கடிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
பீகாரில் ஆட்சிக்கு வந்தால், இந்தியா கூட்டணி மிகவும் பின்தங்கிய, சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மற்றும் தலித்துகளின் அரசாங்கமாக இருக்கும். ஆனால் பீகார் இளைஞர்களை தொழிலாளர்களாக முதல்வர் நிதிஷ்குமார் மாற்றுகிறார். அவர்களுக்கான அனைத்து வேலைவாய்ப்புகளையும் அவர் அழித்துவிட்டார். டெல்லியில் அமர்ந்திருப்பவர்களின் அறிவுறுத்தல்களின்படி அவர் செயல்படுகிறார். நிதிஷ்குமாரும், மோடியும் பீகார் இளைஞர்களுக்கு வேலையின்மையை பரிசாக அளித்தனர். பீகாரில் கேள்வித்தாள் கசிவுகள் வழக்கமான விஷயமாகி வருகின்றன, இது நிதி ரீதியாக பணக்கார மாணவர்களுக்கு பயனளிக்கிறது’ என்றார்.
* ஷாஹாபுதீன் மகன் வென்றால் அது இந்துக்களுக்கு தோல்வி: அசாம் முதல்வர் பேச்சு
அசாம் முதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மா நேற்று சிவான் மாவட்டத்தின் ரகுநாத்பூர் தொகுதியில் பேசும்போது,’ நான் ரகுநாத்பூருக்கு வந்தபோது, அந்தப் பெயர் ராமர் மற்றும் சீதையின் நினைவுகளைத் தூண்டியதால் நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இங்கே ஒரு ஒசாமாவும் இருக்கிறார் என்பதை அறிந்தேன். இந்த ஒசாமாவின் தந்தை ஷஹாபுதீன், கொலைகளைச் செய்வதில் சாதனை படைத்துள்ளார். அவர் பொம்மைகளுக்குப் பதிலாக ஏகே-47 துப்பாக்கிகளுடன் விளையாடி வளர்ந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு ஒசாமா ரகுநாத்பூரில் வெற்றி பெற்றால், அது இந்துக்களுக்கு ஒரு தோல்வியாக இருக்கும். மக்களவைத் தேர்தலில் ஒசாமாவின் தாயை நீங்கள் தோற்கடித்தது போல், சட்டப்பேரவை தேர்தலில் நீங்கள் அவரையும் நிராகரிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் ’ என்றார்.
* சர்ச்சை பேச்சு ஒன்றிய அமைச்சர் மீது வழக்குப்பதிவு
பீகாரின் மொகாமாவில் கைது செய்யப்பட்ட நிதிஷ்கட்சி வேட்பாளர் அனந்த் சிங்கிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன்சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
* காட்டு ராஜ்ஜிய மக்களுக்கு தோல்வி உறுதி: பிரதமர் மோடி
பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பெண் நிர்வாகிகள் மத்தியில் நமோ ஆப் மூலம் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: நான் வாக்குப்பதிவுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வெற்றி குறித்து எனக்கு எந்த கேள்வியும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி சாதனையை முறியடிக்க பீகார் மக்கள் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் காட்டு ராஜ்ஜிய மக்கள் மாநிலத்தில் மிக மோசமான தோல்வியை சந்திக்க நேரிடும். இவ்வாறு பேசினார்.
* மகர சங்கராந்தி பண்டிகைதோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதியுதவி: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,’ பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. நவ.14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நவ. 18ஆம் தேதி நாங்கள் பதவியேற்போம். இம்முறை பீகாரில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வேரோடு பிடுங்கி எறியப்படும். வரும் ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தி பண்டிகை வர இருக்கிறது. இது மக்களுக்கு ஒரு புதிய ஆண்டு. பெண்களுக்காக நாங்கள் அறிவித்த திட்டத்தின் கீழ் மகர சங்கராந்தியின்போது பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.30,000 வரவு வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியை முன்னிட்டு இந்த நிதியுதவி வழங்கப்படும் ’ என்றார்.
* போர் என்று வந்துவிட்டால் தம்பி இல்லை.. எதிரிதான்.. தேஜ்பிரதாப் யாதவ் பேச்சு
பீகாரில் ஆர்ஜெடியில் இருந்து நீக்கப்பட்டு, தனிக்கட்சி தொடங்கிய லாலுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ் நேற்று அவரது தம்பி தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ரகோபூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பிரேம்குமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூறுகையில்,’ போர் என்று வந்துவிட்டால் அண்ணன், தம்பி என்று பார்க்க முடியாது. எதிரி மட்டுமே. தேஜஸ்வி ஒரு குழந்தை. இந்த தேர்தலுக்குப் பிறகு பொம்மை பரிசளிப்பேன்’ என்றார்.
