புதுடெல்லி: பீகாரில் மின் கொள்முதலில் ரூ.60 ஆயிரம் கோடி ஊழலை முன்னாள் ஒன்றிய அமைச்சர் வெளிப்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,’ ஆர்.கே. சிங் 2017 முதல் 2024 வரை ஒன்றிய மின்சார அமைச்சராகப் பணியாற்றினார். பிரதமர் பீகாரில் அதானிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததால், ரூ.60,000 கோடி ஊழல் நடந்ததை அவர் இப்போது அம்பலப்படுத்துகிறார். இதனால் பீகாரில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6 என்று உயர்த்தப்பட்ட விலையில் வாங்கப்பட்டது.
ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து மோடியின் கூட்டாளிகளுக்கு பணம் முழுமையாகச் செல்வதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு இது. இந்தத் தேர்தல்களில் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை முற்றிலும் நிராகரிக்கிறார்கள். ஏனென்றால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்ட முழு அமைப்பும் அதானி மற்றும் அவர் போன்றவர்களுக்கு ஒரு கொள்ளை இயந்திரம் என்பதை மக்கள் அறிவார்கள். இந்த ஊழல் அம்பலப்படுத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்’ என்றார். இதுகுறித்து ஒன்றிய அரசு சார்பிலோ அல்லது பா.ஜவில் இருந்தோ, அதானியிடம் இருந்தோ எந்தவித பதிலும் வரவில்லை.

