பாட்னா: பீகாரில் 12,000க்கும் மேற்பட்ட புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. பீகாரில் தற்போது நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைய வரும் 25ம் தேதி வரை காலக்கெடு உள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்தத்தின்கீழ் இதுவரை 95.92 சதவீத வாக்காளர்கள் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில், இறந்தவர்கள் உள்பட குறிப்பிட்ட முகவரிகளில் அடையாளம் காணப்படாதவர்களின் எண்ணிக்கை 41.64 லட்சத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பீகாரில் 12,000க்கும் மேற்பட்ட புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பீகார் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பீகார் மாநில தேர்தல் துறை வௌியிட்டுள்ள அறிக்கையில், “புதிதாக 12,817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 78,895ல் இருந்து 90,712ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய வாக்குச்சாவடிகளில் 12,479 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே உள்ள அதே கட்டிடம் அல்லது வளாகத்திலும், மீதமுள்ள 388 வாக்குச்சாவடிகள் தனியாகவும் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.