பீகாரில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மாணவர்கள் உயர் கல்வி தொடர வட்டியில்லா கடன்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
பாட்னா: பீகாரில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி தொடர வட்டியில்லா கல்வி கடன் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜ கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இங்கு நடப்பாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க முதல்வர் நிதிஷ் குமார் பல்வேறு அறிவிப்புகளை தற்போதே வௌியிட்டு வருகிறார்.
அதன்படி ஏற்கனவே, பீகாரில் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் ஒரே மாதிரியான தேர்வு கட்டணம் வசூலிக்கப்படும், பீகாரில் ஆசிரியர் பணிக்கு ஆள்சேர்ப்பதில் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளை வௌியிட்டுள்ளார். மேலும், ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்களுக்கு 1 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.4 லட்சம் வரை கல்விக்கடன்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் கல்விக்கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரத்து செய்ய முதல்வர் நிதிஷ் குமார் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து முதல்வர் நிதிஷ் குமார் தன் எக்ஸ் பதிவில், “12ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்கள் அனைவரும் உயர் கல்வியை தொடரும் விதமாக பீகார் அரசு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி கல்விக்கடன் பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “கடந்த 2016 அக்டோபர் 2ம் தேதி முதல் பீகாரில் உள்ள மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. முன்பு ரூ.2 லட்சம் வரையிலான கல்விக்கடன் 60 மாத தவணைகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். இது தற்போது அதிகபட்சமாக 84 மாதங்களாக நீட்டிக்கப்படுகிறது. இதேபோல், ரூ.2 லட்சத்துக்கு மேல் கல்விக்கடன் பெறுவோர் 84 மாத தவணைகளில் திருப்பி செலுத்த வேண்டும்.
இது தற்போது அதிகபட்சமாக 120 மாத தவணைகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உயர் கல்வியை தொடர முடியும் என்பதை உறுதி செய்வதே எனது அரசின் நோக்கம். இந்த முடிவுகள் மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்கும். அவர்கள் அதிக உற்சாகத்துடனும், அர்ப்பணிப்புடனும் உயர் கல்வியை தொடர உதவும். இது மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, மாநிலத்தின், நாட்டின் எதிர்காலத்தையும் சிறப்பாக மாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.