திருச்சி: பீகாரிலும், ஒடிசாவிலும் பிரதமர் மோடி தமிழர்களுக்கு எதிராக அவதூறாக பேசி வருவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் வடமாநிலத்தவர் அதிகம் உள்ளனர். தமிழ்நாடு இன்னொரு பீகாராக மாறி வருகிறது. பீகாரிலும், ஒடிசாவிலும் பிரதமர் மோடி தமிழர்களுக்கு எதிராக அவதூறாக பேசி வருகிறார்.
தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு இடையே போட்டியில்லை. கருத்தியல் போட்டி தான் நிலவுகிறது. ஒருவர் இரு மொழி கொள்கை என்கிறார். மற்றொருவர் மும்மொழி கொள்கை என்கிறார். ஆனால் நாங்கள் ஒரே கொள்கை. தமிழ் மொழி கொள்கை மட்டுமே கொண்டுள்ளோம். கோவை மாணவி கூட்டு பலாத்காரம் மிகப்பெரிய தலைகுனிவு. இந்த சம்பவம் சட்டங்கள் கடுமையாக இல்லை என்பதை தான் உணர்த்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
* ‘தவழ்ந்துதான் முதல்வரானார்’ உண்மையை சொன்னா அவதூறா?
‘எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து முதல்வரானார் என்பது அவதூறல்ல. அது நடந்த உண்மை. சசிகலா காலில் விழுந்து தான் எடப்பாடி பழனிசாமி பதவி பெற்றார். இப்படி இருக்கும்போது இவர்களில் யாருக்காவது துரோகம், சுயமரியாதை, சமூகநீதி குறித்து பேசுவதற்கு தகுதி உண்டா என்பதை யோசித்து பாருங்கள்’ என்று சீமான் தெரிவித்தார்.
