Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகாரைப் போன்ற மோசடி தமிழ்நாட்டிலும் 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: பீகார் மோசடி போன்று தமிழ்நாட்டிலும் 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்துக்கு பிறகு வெளியான பட்டியலில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜ பின்னணியில் இயக்க, தேர்தல் ஆணையம் மிகப் பெரிய மோசடியை அரங்கேற்றி உள்ளதாக கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தரவுகளுடன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அடுத்த பேரதிர்ச்சியை உருவாக்கின. இந்த சூழலில்தான் சென்னைக்கு வந்த சமூகச் செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட், பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் மோசடி நடைபெற்றுள்ளது என்று ஒரு பெரும் குண்டை வீசியுள்ளார். 2002ல் நடந்த குஜராத் கலவர வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கபலமாய் நின்றார்.

சென்னையில் நடந்த கருத்தரங்கில் சமூகச் செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் பேசியதாவது: தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடளுமன்ற தேர்தலில் பாஜ 11 சதவிகித வாக்குகளை பெற்றது. பாஜ போட்டியிட்ட 23 தொகுதிகளில் 19 தொகுதிகளில் 2வது இடத்தைப் பெற்றது. கிட்டத்தட்ட 40 லட்சம் வாக்குகளை பாஜ பெற்றுள்ளது. இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதற்கான பின்னணியே வேறு. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.77 கோடி.

அடுத்து வந்த 2019 மக்களவை தேர்தலில் புதிய வாக்காளர்களையும் சேர்த்து 6.24 கோடியாக வாக்காளர்கள் எண்ணிக்கை இருந்தது. தொடர்ந்து வந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 6.29 கோடியாக அதிகரித்தது. ஆக, சராசரியாக 2016, 2019 ஆண்டுகளில் 40 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். ஆனால், 2021 தேர்தலுக்கும் 2024 தேர்தலுக்கும் இடையிலான எண்ணிக்கையை ஒப்பிடும்போதும், வெறும் 5 லட்சம் வாக்காளர்கள் மட்டும்தான் அதிகரித்துள்ளனர். இதன் மூலம் இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் வாக்காளர்கள், தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

எப்படி இப்படி 30 லட்சம் வாக்காளர்கள் மாயமாகிப்போனார்கள்? இதன் பின்னணி என்னவென்பதை தமிழ்நாட்டு மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய தருணம் இது. 2016ம் ஆண்டில் இருந்து FORM -6, 7 தகவல்களை நாம் கேட்டுப்பெற வேண்டும். தேர்தல் தரவு பகுப்பாய்வாளரான பியாரெ லால் கார்க், தமிழ்நாட்டில் 2016ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 76 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட்டிருக்கலாம். எனவே, இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், மக்களும் தீவிர கவனம் செலுத்துவதோடு, கடந்த 5 தேர்தல்களின் வாக்காளர் பட்டியல்களையும் ஆய்வு செய்ய வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தல் எளிதாக இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

இப்படி ஒரு குற்றச்சாட்டை டீஸ்டா செடல்வாட் வீசியது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலுக்கு வழிவகுக்கும் என்று தெரிகிறது. முந்தைய தேர்தல்களில் 5.5 சதவீத வாக்குகளைக்கூட தாண்டாத பாஜ 2024 தேர்தலில் 11 சதவீத வாக்குகளைப் பெற்றதோடு, பல இடங்களில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை 3ம் இடத்துக்கு தள்ளியது எல்லா தரப்பினரையுமே ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. இதற்கு மாறிவரும் அரசியல் சூழலே காரணம் என்று நம்பப்பட்டு வந்த நிலையில், டீஸ்டா செடல்வாட்டின் குற்றச்சாட்டு வேறு ஓர் அர்த்தப்பாட்டை கொடுப்பதுடன், தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது.