ராஜ்கிர்: ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் 11வது தொடர் இன்று பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் தொடங்குகிறது. ஆசிய கோப்பை போட்டி முதல் முறையாக பீகார் மாநிலத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, இந்தியா உட்பட 8நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்த அணிகள் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் முறையில் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். இந்த 2 பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதி ஆட்டத்தில் களம் காணும். லீக் சுற்று ஆட்டங்கள் செப்.6ம் தேதியுடன் முடிய, இறுதி ஆட்டம் செப்.7ம் தேதி நடைபெறும். கூடவே 3 முதல் 6 வரையில் இடங்களுக்கான ஆட்டங்களும் நடத்தப்படும். இன்று காலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள மலேசியா-வங்கதேசம் அணிகள் களம் காண உள்ளன. ஏ பிரிவில் உள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று மாலை சீனாவை எதிர்கொள்ள உள்ளது. சாம்பியன் பட்டம் பெறும் நேரடியாக உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதிப் பெறும்.
இதுவரை இந்தியா
* இதுவரை நடந்த 11 ஆண்கள் ஆசிய கோப்பைகளில் இந்தியா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது
* கூடவே தொடர்ந்து முதல் 4 தொடர்கள் உட்பட இதுவரை 5 முறை 2வது இடம் பிடித்துள்ளது.
* அதுமட்டுமின்றி 2 முறை அரையிறுதி வரை முன்னேறி 3வது இடத்தை கைப்பற்றி இருக்கிறது.
* ஆக 11 கோப்பைகளில் 10 முறை இந்திய அணி கவனிக்கதக்க அணியாக விளையாடி இருக்கிறது. ஒரே ஒரு முறை 12 அணிகள் பங்கேற்ற 2009ல் மட்டும் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்திய அணி: ஹர்மன்பிரீத் (கேப்டன்), கிரிஷன், சுராஜ்(கோல் கீப்பர்கள்), சுமீத், சஞ்ஜெய், ஜெர்மன்பிரீத், ரோகிதாஸ், ஜூகராஜ், ராஜிந்தர் சிங், ராஜ்குமார், ஹர்திக் , மன்பிரீத், விவேக்சாகர், மன்தீப், ஷிலானந்த், அபிஷேக், சுக்ஜீத், தில்பிரீத். பதிலி ஆட்டக்காரர்கள்: நீலம் சஞ்ஜீப், செல்வம் கார்த்தி(தமிழ்நாடு)
பங்கேற்கும் அணிகள்
பிரிவு ஏ: இந்தியா, ஜப்பான், சீனா, கஜகஸ்தான்
பிரிவு பி: மலேசியோ, கொரியா, வங்கதேசம், சீன தைபே
* முதல் முறையாக…
இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடரும் தீவிரவாத, அரசியல் பிரச்னைகள், மோதல்கள் விளையாட்டிலும் தொடர்கிறது. அதனால் இந்த ஆசிய கோப்பையில் பங்கேற்க, இந்திய செல்ல முடியாது என்று பாகிஸ்தான் அறிவித்து விட்டது. அதனால் பாகிஸ்தான் இல்லாமல் முதல் முறையாக ஆண்கள் ஆசிய கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. இதுவரை பங்கேற்ற 10 தொடர்களில் பாக் தலா 3 முறை கோப்பை, 3 முறை 2வது இடம், 3முறை 3வது இடம் பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 5வது இடம் பிடித்தது.
இதுவரை சாம்பியன்கள்
ஆண்டு சாம்பியன் 2வது இடம்
1982 பாகிஸ்தான் இந்தியா
1985 பாகிஸ்தான் இந்தியா
1989 பாகிஸ்தான் இந்தியா
1994 தென் கொரியா இந்தியா
1999 தென் கொரியா பாகிஸ்தான்
2003 இந்தியா பாகிஸ்தான்
2007 இந்தியா தென் கொரியா
2009 தென் கொரியா பாகிஸ்தான்
2013 தென் கொரியா இந்தியா
2017 இந்தியா மலேசியா
2022 தென் கொரியா மலேசியா