சென்னை: பீகார் தேர்தலை கண்காணிக்க தமிழகத்தில் இருந்து 5 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் இன்று முதல் தமிழகத்தில் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மதுமதி, பீகாரில் உள்ள தாராரி சட்டப்பேரவை தொகுதிக்கும், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளர் சஜ்ஜன் சிங் சவான், ராஜ்கீர் தொகுதிக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் சரவணவேல்ராஜ், தாரவுளி தொகுதிக்கும், மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளர் சமயமூர்த்தி, கயா டவுன் தொகுதிக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், நிர்மாளி தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது பணிகள் வேறு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி கால்நடைத்துறைச் செயலாளர் சுப்பையனுக்கு, மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை செயலாளராக உள்ள ஜெயஸ்ரீமுரளீதரனுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும், கைத்தறித்துறை செயலாளர் அமுதவள்ளிக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையும், தொழிலாளர் நலத்துறை செயலாளர் வீரராகவ ராவுக்கு, திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.