சென்னை: சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி சரிவும் பெற்று இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், வெற்றி பெற்றவர்களை பாராட்டுவது தான், அரசியலில் ஆரோக்கியமானது. நிதிஷ்குமார் எனக்கு மிக மிக நெருங்கிய நண்பர். நாடாளுமன்ற விவாதத்தின் போது, இந்த விவாதத்தில் ஹீரோ வைகோ என்று, என்னை குறிப்பிட்டுள்ளார்.
பீகாரின் நிலை, இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த தேர்தல் முடிவுகளை பார்த்து, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கின்ற கட்சிகள், நாமும் வெற்றி பெற்று விடலாம் என மனப்பால் குடிக்கலாம், கனவு கோட்டைகளை கட்டலாம். அது ஒன்றும் நடக்காது.
தமிழகத்தில் திராவிட மாடல் நல்லாட்சி நடத்தி வரும், எனது சகோதரர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி தான், மிகப்பெரிய வெற்றியை பெறும். தனி மெஜாரிட்டி திமுகவிற்கு கிடைக்கும். இதில் எந்த மாற்றுக்கருத்தும், ஐயமும் எங்களுக்கு இல்லை. ராகுல் காந்தி, சக்தியை மீறி மக்களை சந்தித்தார். அவரின் கடமையை செய்தார். ராகுல் காந்தி இந்த தோல்விக்கு எல்லாம், சோர்வு அடைபவர் இல்லை. இன்னும் சுறுசுறுப்பாக அவர் வேலை செய்வார். எஸ்ஐஆர் மிகப்பெரிய பிராடு வேலை.


