பாட்னா: பீகார் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவ் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ் தனிக்கட்சி தொடங்கி தனியாக போட்டியிடுகிறார். இந்த பரபரப்பான சூழலில் நேற்று தேஜ் பிரதாப் யாதவ், யூடியூபர் சம்திஷ் பாட்டியாவுடனான நேர்காணலுக்காக விமானநிலையத்தில் உள்ள பேப் இந்தியா விற்பனை நிலையத்திற்கு சென்று இருந்தார். அப்போது ஏர்போர்ட்டுக்குள் தேஜஸ்வியாதவ் நுழைந்தார். அண்ணனும், தம்பியும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். ஆனால் பேசவில்லை.
அதேசமயம் தேஜஸ்வி யாதவ் சம்திஷைப் பார்த்து, ‘ என் சகோதரர் உங்களை ஷாப்பிங் அழைத்துச் சென்றாரா?’ என்று நக்கலாக கேட்டபடி, ‘நீ மிகவும் அதிர்ஷ்டசாலி’ என்று கூறிவிட்டு அந்த இடத்தை கடந்து சென்றார். அப்போது தேஜ் பிரதாப் சில அடி தூரத்தில் நின்று, அமைதியாக முகத்தை வைத்துக்கொண்டு எதுவும் நடக்காதது போல் அங்குள்ள ஆடைகளை பார்த்துக்கொண்டு இருந்தார்.
தேஜஸ்வி கடந்து சென்றபிறகு சம்திஷ், தேஜ்பிரதாப் பக்கம் திரும்பி,’ நீங்கள் இருவரும் இப்போதெல்லாம் பேசுகிறீர்களா?’ என்று கேட்க, அதற்கு தேஜ் பிரதாப்,’அவர் நன்றாக இருக்கிறார்’ என்று மெதுவாக கூறும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
