பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும். முதல் கட்டமாக 121 இடங்களுக்கும், இரண்டாம் கட்டமாக 122 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான மனுத்தாக்கல் தொடங்கி விட்டது. ஆனால் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும், காங்கிரஸ் இடம் பெற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நிலவி வந்தது.
இறுதியாக பா.ஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டது. அதன்படி பா.ஜ, முதல்வர் நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன. ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களையும், மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா, முன்னாள் முதல்வரும் ஒன்றிய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியால் நிறுவப்பட்ட இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலா 6 இடங்களில் போட்டியிடுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பீகார் தேர்தலுக்கு 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. மீதமுள்ள 30 வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி, தாராப்பூர் தொகுதியிலும், மற்றொரு துணை முதலமைச்சர் விஜயகுமார் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.