பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆம் தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் சங்கீதா குமாரி ( மோகனியா தொகுதி), சேதன் ஆனந்த் (ஷியோஹர் தொகுதி) ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டனர்.
இதையடுத்து 2 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் பா.ஜ கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வந்தனர். அவர்களது எம்எல்ஏ பதவியை பறிக்க ஆர்ஜேடி சார்பில் கொடுக்கப்பட்ட மனு தற்போது சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவ் முன்பு நிலுவையில் உள்ளது. இவர்கள் இருவரும் பா.ஜவில் சேர உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான முராரி பிரசாத் கவுதம் மற்றும் பபுவாவைச் சேர்ந்த ஆர்ஜேடி எம்எல்ஏ பாரத் பிந்து ஆகியோரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
நிதிஷ்நண்பர் விலகல்: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் நெருங்கிய நண்பரும், பூர்ணியா மக்களவை தொகுதியில் 2 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவருமான சந்தோஷ் குஷ்வாஹா மற்றும் ராகுல் சர்மா ஆகியோர் நேற்று தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் ராஷ்ட்ரீய ஜனதாக தளம் கட்சியில் இணைந்தனர்.
* பணம் கொடுத்த பப்புயாதவ் சிக்கினார்
வைசாலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் விநியோகித்ததாக பப்பு யாதவ் எம்பி மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு பதியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் சஹ்தேய் காவல் நிலையத்தில் பப்புயாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* புர்கா பெண்களை அடையாளம் காண பூத்களில் சிறப்பு ஏற்பாடு
புர்கா அல்லது பர்தா அணிந்து வரும் பெண் வாக்காளர்களை கண்ணியமான முறையில் அடையாளம் காண வசதியாக பீகாரில் உள்ள வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெண் வாக்குச் சாவடி அதிகாரிகள் அல்லது உதவியாளர்கள், அங்கன் வாடி ஊழியர்கள் முன்னிலையில் அவர்கள் அடையாளம் சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.