புதுடெல்லி: பீகார் தேர்தல் பிரசாரத்தில் ஏஐ கருவிகளை தவறாக பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வௌியிட்ட அறிவிப்பில், “பீகார் தேர்தல் பிரசாரத்தில் தவறான தகவல்களை பரப்ப, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த கூடாது. அரசியல் கட்சிகள், முக்கிய பிரசாரகர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் சமூக ஊடக தளம் வாயிலாகவோ அல்லது விளம்பர வடிவிலோ பிரசாரத்துக்காக பயன்படுத்தும் காட்சிகளில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டது அல்லது செயற்கை உள்ளடக்கம் என்ற குறியீடுகளை வௌியிட வேண்டும். தேர்தல் செயல்பாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த சமூக வலைதளங்களில் தகவல்களை சிதைக்கும் அல்லது தவறான தகவல்களை பரப்பும் ஆழமான போலிகளை(டீப் ஃபேக்) உருவாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்த கூடாது. தேர்தல் சூழல் சீர்குலைவதை தடுக்க அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பிரசாரகர்களின் சமூக ஊடக கணக்குகள் கடுமையாக கண்காணிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.