பாட்னா: ஆர்ஜேடி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பீகாரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது; “எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு வீட்டிலும் அரசு வேலை உள்ள ஒருவர் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
அரசாங்கத்தை அமைத்த 20 நாட்களுக்குள் அதற்கான புதிய சட்டத்தை நாங்கள் உருவாக்குவோம். பதவியேற்ற 20 மாதங்களுக்குள், இந்த திட்டம் மாநிலம் முழுவதும் முழுமையாக செயல்படுத்தப்படும். 20 மாதங்களில் பீகாரில் ஒரு வீடு கூட அரசு வேலை இல்லாமல் இருக்காது” என்று அவர் கூறினார்.
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த வாக்குறுதியை தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது, வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, எல்ஜேபி, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ(எம்-எல்), சிபிஐ, சிபிஎம், விகாசீல் இன்சான் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுரான், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தனித்தனியாக போட்டியிடுகின்றன.