Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனல்பறக்கும் பீகார் தேர்தல்: பிரதமர் மோடி, ராகுல் ஒரே நாளில் பிரசாரம்

பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி, ராகுல்காந்தி, அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோர் நேற்று ஒரே நாளில் பீகாரை முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொண்டனர். பீகார் மாநிலத்தில் 121 தொகுதிகளில் நவ.6ஆம் தேதியும், 122 தொகுதிகளில் நவ.11 ஆம் தேதியும் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. நவ.14ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நவ.4ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. எனவே அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அக்.24ஆம் தேதி பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் பிரசாரத்தை தொடங்கினார்.

நேற்று ஒரே நாளில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி ஆகியோர் பீகாரை முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் தனித்தனியாக தீவிரபிரசாரத்தில் ஈடுபட்டனர். முசாபர்பூர் மற்றும் சரண் மாவட்டங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேசினார். ராகுல்காந்தி நேற்று நாளந்தா மற்றும் ஷேக்புரா மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று லக்கிசராய், முங்கர், நாளந்தா, பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். பாஜ தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும், பக்சர் மற்றும் பாட்னா மாவட்டங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.

முசாபர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பீகாரில் கொண்டாடப்பட்ட சாத் பண்டிகைக்குப் பிறகான எனது முதல் பொதுக்கூட்டம் இது. சாத் தேவி வழிபாடு என்பது தாய் மீதான பக்தியின் வெளிப்பாடு. சாத் தேவியின் புகழைப் பரப்புவதில் நாங்கள் மும்முரமாக இருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் கட்சியும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சாத் தேவியை அவமதிக்கிறார்கள். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக யாராவது சாத் தேவியை அவமதிக்க முடியுமா?. சாத் பண்டிகையை முன்னிட்டு உண்ணாவிரதம் இருக்கும் எனது அருமை தாய்மார்களால் இத்தகைய அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியுமா? அவர்களைப் பொறுத்தவரை சாத் தேவியை வழிபடுவது ஒரு தந்திரம். அத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமா இல்லையா? ஆர்ஜேடி மற்றும் காங்கிரசால் பீகாரை ஒருபோதும் வளர்க்க முடியாது.

பீகார் தேர்தல் போரில் வெற்றி பெற இரண்டு இளவரசர்கள் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். ஒருவர் இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். மற்றொருவர் பீகாரின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். இருவர் மீதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். காங்கிரசுக்கும், ஆர்ஜேடிக்கும் இடையிலான உறவு எண்ணெய் மற்றும் தண்ணீர் போன்றது. இரண்டையும் ஒரு கண்ணாடியில் வைக்க முயற்சிக்கிறீர்கள். இவை கலக்கப் போவதில்லை. இரு கட்சிகளும் அதிகாரத்தைக் கைப்பற்ற ஒன்றிணைந்து பீகாரை கொள்ளையடிக்க வந்துள்ளன. இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவரையொருவர் வீழ்த்துவதில் மும்முரமாக உள்ளனர்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

* பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை: ராகுல்காந்தி

பீகார் மாநிலத்தில் இரண்டாவது நாளாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, நாளந்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் நின்றதற்குக் காரணம் அவர்தான் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால், நமது பிரதமருக்கு டிரம்பை எதிர்கொள்ள தைரியம் இல்லை, அவர் பொய் சொல்கிறார் என்று சொல்லுங்கள். மோடி அமெரிக்காவுக்குச் செல்லவிருந்தார். ஆனால் டிரம்பிற்கு பயந்து அவர் செல்லவில்லை. அமித்ஷா பீகாரில் நிலம் இல்லை என்கிறார்.

ஆனால் ஒரு தொழில்துறை நிறுவனத்திற்கு மிகக் குறைந்த விலையில் நிலங்கள் வழங்கப்பட்டன. மோடிக்கு நெருக்கமான கார்ப்பரேட் நிறுவனங்கள் பீகார் இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியாது. ஒன்றிய அரசு மற்றும் பீகார் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளால்தான் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கிறார்கள். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பீகார் தொழிலாளர்களை மட்டுமே வழங்கும் மாநிலமாக இருக்காது. தொழில்களை உருவாக்கும் மாநிலமாகவும் மாறும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உலகின் சிறந்த பல்கலைக்கழகம் நாளந்தாவில் உருவாகும். இவ்வாறு பேசினார்.

* தமிழ்நாடு, தெலங்கானாவில் பீகாரிகள் தாக்கப்படுகிறார்கள்

பிரதமர் மோடி பேசும் போது,’ தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டிலும் பீகாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் அந்த மாநிலங்களின் முதல்வர்கள் பீகாரில் பிரசாரத்திற்காக அழைத்து வரப்படுகிறார்கள். பீகார் மாநில மக்களின் மனதில் வெறுப்பை உருவாக்குவதன் மூலம் ஆர்ஜேடிக்கு சேதம் விளைவிப்பதே காங்கிரஸின் உத்தி என்று நான் யோசிக்கிறேன். பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் எம்பியாக இருந்த போது ​​பீகாரிகள் விரட்டப்பட வேண்டும் என்று பேசினார். இப்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் காங்கிரசில் ஒரு பெரிய குடும்பத்தின் மகள்(பிரியங்காகாந்தி) சிரித்து கைதட்டினார்’ என்றார்.

* ராகுல்காந்திக்கு எதிராக தேர்தல் கமிஷனில் புகார்

பிரதமர் மோடி ஓட்டுக்காக நடனம் கூட ஆடுவார் என்று ராகுல்காந்தி பேசியதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று பா.ஜ சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

* நிதிஷ்குமார் தேர்தல் மணமகள் முதல்வர் வேட்பாளர் இல்லை

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் கூறுகையில்,’ பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற நிதிஷ் குமாரை பாஜ பயன்படுத்துகிறது. தேர்தலுக்குப் பிறகு அவர் முதல்வராக இருக்க அனுமதிக்கப்படமாட்டார். அவர் நிச்சயமாக பாஜவின் தேர்தல் மணமகள். ஆனால் முதல்வர் பதவிக்கு அவர் மணமகன் அல்ல. பாஜ ஒரு சதித்திட்டத்தின் கீழ், நிதிஷ் குமாரைப் பயன்படுத்துகிறது. மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் என்ன நடந்தது என்று பாருங்கள். தேர்தலுக்கு முன்பு முகங்களாகக் காட்டப்பட்டவர்கள் பின்னர் முதல்வர்களாக ஆக்கப்படவில்லை. பீகாரிலும் இதேதான் நடக்கும்’ என்றார்.

* பீகார் புதிய முதல்வர் நிதிஷ்குமாருக்கு பதில் சாம்ராட் சவுத்ரியா? அமித்ஷா அறிவிப்பால் பரபரப்பு

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே தேர்தலில் பா.ஜ கூட்டணி வென்றாலும் முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் அமர மாட்டார் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில் முங்கர் மாவட்டத்தின் தாராபூர் சட்டப்பேரவை தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணைமுதல்வரும், பா.ஜ மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்திரியை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: தாராபூர் மக்களே, மற்ற இடங்களில் உள்ள மக்கள் தங்கள் எம்.எல்.ஏக்களுக்கு ஒரு அமைச்சர் பதவியைப் பெறுமாறு எங்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள். உங்கள் எம்.எல்.ஏ இப்போதே துணை முதல்வர். தயவுசெய்து அவருக்கு வாக்களித்து அவரது வெற்றியை உறுதி செய்யுங்கள். வரும் நாட்களில், பிரதமர் மோடி அவரை ஒரு பெரிய மனிதராக, மிகப் பெரிய மனிதராக மாற்றப் போகிறார் என்றார்.

* லாலுபிரசாத் கட்சியினர் கார் கொள்ளையர்கள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

முசாபர்பூர்: பிரதமர் மோடி நேற்று பீகார் பிரசாரத்தில் பேசும் போது,’ இன்று, திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களால் செழிப்பு மற்றும் சேமிப்பு எளிதாக்கப்பட்டுள்ளது. பீகாரில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் முதலீடு செய்கிறார்கள். வாகன ஷோரூம்கள் மூடப்பட்ட காட்டு ராஜ்ஜிய சகாப்தத்திலிருந்து இது வெகு தொலைவில் உள்ளது. ஆர்ஜேடி தலைவர்கள் ஷோரூம்களுக்குள் நுழைந்து கொள்ளையடித்து கார்களை எடுத்துச் சென்றனர் என்பதே வாகன ஷோரூம்கள் மூடப்பட்டதற்கு காரணம்’ என்று குற்றம் சாட்டினார். அப்போதைய பீகார் முதல்வர் ராப்ரி தேவியின் மூத்த மகள் மிசா பாரதியின் திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை மறைமுகமாக அவர் குறிப்பிட்டார். அப்போது, ​​பல புத்தம் புதிய வாகனங்கள் ஷோரூம்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

* பிரதமர் மோடி நாட்டையே கொள்ளையடித்து விட்டார்: லாலுபிரசாத் மனைவி ராப்ரி தேவி ஆவேசம்

பிரதமர் மோடியின் கார் கொள்ளையர் குற்றச்சாட்டு குறித்து லாலுவின் மனைவி ராப்ரி தேவியிடம் கேட்ட போது,‘பிரதமர் மோடியைத்தான் திருடன் என்று அழைக்க வேண்டும். அவர் நாட்டையே கொள்ளையடித்துவிட்டார்’ என்றார்.

ராப்ரி தேவி 1997 வரை ஒரு இல்லத்தரசியாக இருந்தார். அவரது கணவர் லாலு பிரசாத், கால்நடை தீவன ஊழலில் சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து விலகியதால் பீகார் முதல்வராக ராப்ரி தேவி பதவி ஏற்றார். ராப்ரி தேவியின் சகோதரர்களான சாது யாதவ் மற்றும் சுபாஷ் யாதவ் ஆகியோர் மீது இந்த சம்பவம் பற்றி அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது. அவர்கள் இப்போது தங்கள் சகோதரியை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.