புதுடெல்லி: பீகார் சட்டப் பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்த, தலைமை தேர்தல் ஆணையம் 470 அதிகாரிகளை கண்காணிப்பாளர்களாக நியமித்துள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 470 அதிகாரிகளை மத்தியக் கண்காணிப்பாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
பீகார் தேர்தலுடன் சேர்த்து ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஜார்கண்ட், தெலங்கானா, பஞ்சாப், மிசோரம் மற்றும் ஒடிசா ஆகிய 8 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களையும் இந்த அதிகாரிகள் கண்காணிப்பார்கள். புதியதாக நியமிக்கப்பட்டுள்ள 470 அதிகாரிகளில், 320 பேர் இந்திய ஆட்சிப் பணியையும், 60 பேர் இந்திய காவல் பணியையும், 90 பேர் இந்திய வருவாய்ப் பணி போன்ற பிற துறைகளையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் பொது, காவல் மற்றும் செலவினக் கண்காணிப்பாளர்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள். தற்போதைய தகவல்களின்படி, வாக்காளர் பட்டியலின் இறுதி பட்டியல் வரும் 30ம் தேதி (நாளை) வெளியிடப்படும்.
அதன் பிறகு அக்டோபர் முதல் வாரத்தில் தேர்தல் தேதி தொடர்பான அட்டவணை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையில், அக்டோபர் 4 மற்றும் 5 அன்று தலைமை தேர்தல் அதிகாரிகள் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பீகாரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதன்பின் அக்டோபர் 6ம் தேதிக்குப் பிறகு தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகும். இந்த தேர்தல் நவம்பர் 5 முதல் 15 வரை மூன்று கட்டங்களில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.