பீகார் தோல்விக்கு முதல்வர் பிரசாரம் காரணம் என்றால் 2024 தோல்விக்கு மோடி பிரசாரம் காரணமா? நயினார் கேள்விக்கு காசிமுத்து மாணிக்கம் பதிலடி
சென்னை: திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: பீகாரில் தேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரங்கள் முன்பாக ஒரு கோடி பெண்கள் கணக்கில் பத்தாயிரத்தை வரவு வைத்து, கிடைக்காதவர்களுக்கும் வாக்கு போட்டால் தான் பத்தாயிரம் கிடைக்கும் என வதந்தியை பரவச் செய்து, 70 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமையை பறித்து, தேர்தல் ஆணையராக மூவரில் ஒருவர் நீதிபதி என்பதை மாற்றி மூவரில் இருவர் ஆளும் பிரதமர், மற்றொரு அமைச்சர் என பெரும்பான்மையாக்கி ஞானேஷ்குமாரை தேர்தல் ஆணையராக்கியதால், துணை முதல்வரே ஊருக்குள் நுழைந்தால் கல்லடி, செருப்படி நிலையிலிருந்தும், பாஜ வென்றது.
எஸ்ஐஆரால் பெரிய தீமை வரும் என்றோம், வந்துவிட்டது. உலகமே இந்திய ஜனநாயகத்தை கேலி செய்யும் சூழலில், உண்மையை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் ‘‘தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தால் பாஜ கூட்டணி வென்றது” என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். அப்படி என்றால் 2024-ல் திமுக 40க்கு 40 பெற்றது கூட மோடி, அமித்ஷா பிரசாரத்தால் தான் என்கிறாரா?. ராகுல், தேஜஸ்வி யாதவை விட ஆதரவு கோஷம் வந்தது முதல்வருக்கு தான். தளபதிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து வயிறு எரிந்து, மடைமாற்றம் செய்ய திமுகவினரால் தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக தரம் தாழ்ந்து பிரதமர் பேசவேண்டிய அசிங்கம் ஏற்பட்டது.
தமிழகத்தில் 200 தொகுதியில் பா.ஜ. கூட்டணி ஜெயிக்கும் என்று நயினார் கூறுகிறார். இப்படித்தான் இதற்கு முன்பு இருந்த பாஜ தலைவர் 25 எம்.பி. ஜெயிக்கும். அந்த 25ல் ஐந்து நபர் ஒன்றிய அமைச்சராவார்கள் என்றார். 19 இடத்தில் டெபாசிட் போனதும், அண்ணாமலைக்கு தலைவர் பதவி போனதும் தான் மிச்சம். நயினார் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அண்ணாமலைக்கு நேர்ந்தது போல 7 மாதத்தில் நயினாருக்கு மாநிலத் தலைவர் பதவி, முன்னாளாகி விடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


