இன்று ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் பீகார் முதல்வராக நாளை பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
புதுடெல்லி: பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் நாளை 10வது முறையாக பதவி ஏற்க உள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். பீகார் சட்டப்பேரவைக்கு நவ.6 மற்றும் 11ஆம் தேதிகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து முதல்வர் நிதிஷ்குமார் பீகார் மாநிலத்தின் முதல்வராக 10 வது முறையாக நாளை பதவி ஏற்க உள்ளார்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி , ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், தர்மேந்திர பிரதான், சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட பல உயர்மட்ட லைவர்கள் இந்த பிரமாண்டமான நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
நிதிஷ்குமார் தலைமையில் பதவி ஏற்க உள்ள புதிய அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக பா.ஜவுக்கு 16, ஐக்கிய ஜனதாதளம் 14, சிராக் பாஸ்வான் கட்சிக்கு 3, ஜிதன்ராம் மஞ்சி கட்சிக்கு ஒன்றும், ஆர்எல்எம் கட்சிக்கும் ஒன்றும் அமைச்சரவையில் இடம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சசாரம் தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்.எல்.எம் தலைவர் உபேந்திர குஷ்வாஹாவின் மனைவி சினேகலதாவுக்கும் அமைச்சரவைப் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் பாட்னாவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவார். அதை தொடர்ந்து எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னர் மாளிகை செல்லும் அவர் ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து முதலில் ராஜினாமா கடிதத்தை வழங்கி விட்டு, அதன்பின் ஆதரவு எம்எல்ஏ கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.
இந்த நடைமுறைகள் அடிப்படையில் பீகார் அரசு அமைப்பது குறித்து ஐக்கியஜனதா தலைவர்கள் சஞ்சய் ஜா, லாலன் சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பா.ஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் பங்கேற்றார்.
இதை தொடர்ந்து பீகாரில் பா.ஜ சட்டப்பேரவை கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய பார்வையாளராக உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை பா.ஜ மேலிடம் நியமித்துள்ளது. ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் இணைப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
* இவிஎம்மில் 25 ஆயிரம் வாக்குகளா? தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது: லாலு கட்சி குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்
பீகார் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் வாக்குப்பதிவுக்கு முன்பே 25,000 வாக்குகள் இருந்ததாக லாலுபிரசாத் தலைமையிலான ஆர்ஜேடியின் மூத்த தலைவர் ஜக்தானந்த் சிங் கூறிய குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நேற்று நிராகரித்தது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,’இந்த குற்றச்சாட்டு தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது. நடைமுறைப்படி தவறானது.
ஆர்ஜேடியின் சொந்த தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு முகவர்கள் கையொப்பமிட்ட சட்டப்பூர்வ பதிவுகளுக்கு முரணானது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைஃபை, புளூடூத், இணையம் அல்லது வேறு எந்த வெளிப்புற இணைப்பும் இல்லாததால் ரிமோட் அல்லது டிஜிட்டல் டேம்பரிங் சாத்தியமற்றது. வாக்குப்பதிவுக்கு முன், ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ‘0’ வாக்குகளைக் காட்டுகிறது,
மேலும் அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் கட்டாய மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது, அதன் பிறகு அனைத்து மாதிரி வாக்குகளும் அழிக்கப்பட்டு, ஒரு மாதிரி வாக்கெடுப்பு சான்றிதழ் கூட்டாக கையொப்பமிடப்படுகிறது. இந்த பணிகளின் போது அரசியல் முகவர்கள் இருப்பார்கள். இந்த விவகாரத்த்தில் லாலுகட்சியால் எந்த நம்பகமான ஆதாரமும் வழங்கப்படவில்லை’ என்றுகுறிப்பிட்டுள்ளது.
* சபாநாயகர் பதவிக்கு மோதும் பா.ஜ, ஐக்கிய ஜனதாதளம்
பீகார் அமைச்சரவை ஒதுக்கீடு ஆலோசனை முடிந்து விட்டது. ஆனால் பா.ஜவும், ஐக்கிய ஜனதா தளமும் சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க மறுப்பதால் இழுபறி நீடித்துவருகிறது. தற்போதைய சட்டப்பேரவையில் பாஜவை சேர்ந்த நந்த் கிஷோர் யாதவ் சபாநாயகராகவும், ஜே.டி(யு)வின் நரேந்திர நாராயண் யாதவ் துணை சபாநாயகராகவும் பணியாற்றினார்.
* 43 நிர்வாகிகளுக்கு காங். நோட்டீஸ்
பீகார் சட்டப்பேரவை தேர்தலின் போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, முன்னாள் அமைச்சர்கள் உட்பட 43 தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 43 பேரில் முன்னாள் அமைச்சர் வீணா ஷாஹி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் மதுரேந்திர குமார் சிங், மாநில காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் கைசர் கான், முன்னாள் எம்எல்ஏ சுதிர் குமார் மற்றும் முன்னாள் எம்எல்சி அஜய் குமார் சிங் ஆகியோர் அடங்குவர். நவம்பர் 21 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ விளக்கத்தை அளிக்க வேண்டும்.
* எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க மறுத்த தேஜஸ்வி; ஏற்க வைத்த லாலு
சகோதரி ரோகிணி ஆச்சார்யாவின் குற்றச்சாட்டால் மனம் உடைந்த தேஜஸ்வி எதிர்க்கட்சித் தலைவராக வர மறுத்துவிட்டார். ஆனால் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியதை அடுத்து அந்தப் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டார். தேஜஸ்வி பேசுகையில்,’ இந்தத் தேர்தலில் நான் மிகவும் கடினமாக முயற்சித்தேன், ஆனால் அது தோல்வியில் முடிந்துவிட்டது. கட்சியின் மோசமான செயல்பாட்டிற்கு எனது நண்பரும், எம்பியுமான சஞ்சய் யாதவை குறிவைத்தது தவறு. அதற்கு அவர் பொறுப்பல்ல’ என்று கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
* பஞ்சாப் டிஜிபிக்கு சம்மன் தேர்தல் ஆணையம் அதிரடி
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் டர்ன் தரன் எஸ்எஸ்பிக்கு எதிரான புகார்கள் அளிக்கப்பட்டன. எதிர்க்கட்சி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் புகார்களைத் தொடர்ந்து, மூத்த காவல் கண்காணிப்பாளர் ரவ்ஜோத் கவுர் கிரேவாலை இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தற்போது பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவை நவம்பர் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
* லாலு, ரப்ரியை துன்புறுத்தினால் விசாரிக்க வேண்டும்: தேஜ்பிரதாப்
மஹுவா தொகுதியில் தோல்வியடைந்த லாலுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ் தனது சகோதரி ரோகிணி ஆச்சார்யாவை ஆதரித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவில்,’நெருக்கடிக்குக் காரணம் துரோகிகளுக்கான உருவகமான ‘ஜெய்சந்த்’ தான். என் பெற்றோர் லாலு பிரசாத் மற்றும் என் தாயாரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தத்தில் வைத்திருக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் பாரபட்சமற்ற, கடுமையான மற்றும் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பீகார் அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். ரோகிணிக்கு நடந்தவை என்னை உலுக்கியது. எனக்கு நடந்ததை நான் பொறுத்துக்கொண்டேன், ஆனால் என் சகோதரிக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. இது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.


