பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளர்: இந்தியா கூட்டணி அறிவிப்பு; கூட்டணி கட்சிக்கு துணை முதல்வர் பதவி
பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல், கூட்டணியில் இடம் பெற்றுள்ள விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானிக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் பாட்னாவில் நேற்று வெளியிட்டார். பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்டணி தேர்தலுக்கு பிறகு முதல்வர் யார் என்பதை முடிவு செய்வோம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து விட்டார். இதனால் முதல்வர் நிதிஷ்குமார் அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில் இந்தியா கூட்டணியிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டாலும் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது கூறிய அசோக் கெலாட்,’ இந்தியா கூட்டணி சார்பில் இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை நாங்கள் ஆதரிக்கிறோம். இங்கே அமர்ந்திருக்கும் நாங்கள் அனைவரும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். அதேபோல், கூட்டணியின் துணை முதல்வர் வேட்பாளராக விஐபி கட்சியின் முகேஷ் சஹானி அறிவிக்கப்படுகிறார்’ என தெரிவித்தார். இதையடுத்துப் பேசிய தேஜஸ்வி யாதவ்,’நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல, பீகாரில் மாற்றத்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். என் மீது நம்பிக்கை வைத்ததற்காக இந்தியா கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.
உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள அனைத்தையும் செய்வேன். தற்போது ஆட்சியில் உள்ள 20 ஆண்டு கால அரசாங்கத்தை நாங்கள் ஒன்றிணைந்து முடிவுக்குக் கொண்டு வருவோம். எங்கள் கூட்டணி சார்பில் நாங்கள் அனைவரும் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி உள்ளோம். நான் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். ஆனால், எதிர்தரப்பின் நிலை என்ன? அங்கே நிதிஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. கூட்டாக அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நான் கேட்க விரும்புகிறேன். நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்திக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில்கூட ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தேர்தலை எதிர்கொண்டார்கள். பின்பு வேறு ஒருவர் முதல்வர் ஆனதைப் பார்த்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. நிதிஷ் குமாரை பாஜவினர் முதல்வராக்கப் போவதில்லை. இதை நாங்கள் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறோம். அமித் ஷா இதைத்தான் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. அவர்கள் எப்போதும் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். இந்த முறை நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக ஏன் அறிவிக்கவில்லை? அவர்கள் தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தளத்தையும் அழித்து விடுவார்கள்.
பீகார் மக்கள் எங்களுக்கு 5 ஆண்டுகள் அல்ல, 20 மாதங்கள் கொடுத்தால்கூட எங்கள் அரசு 20 ஆண்டுகளில் இவர்கள் செய்யாததை நாங்கள் 20 மாதங்களில் செய்து முடிப்போம். அரசு வேலை இல்லாமல் பீகாரில் எந்தக் குடும்பமும் இருக்காது என்ற உறுதியை நாங்கள் அளிக்க விரும்புகிறோம். மேலும் பீகார் மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். தேஜஸ்வி ஒருபோதும் ஊழலில் சமரசம் செய்து கொள்ள மாட்டார். குற்றம் சாட்டப்பட்ட யாரையும், அது அவரது சொந்த நிழலாக இருந்தாலும் சரி அல்லது செல்வாக்கு மிக்க யாராக இருந்தாலும் சரி. ஊழல் செய்தால் சமரசம் இல்லை ‘ என்று தெரிவித்தார்.
* தேஜஸ்வியை முதல்வராக்க ராகுல் சம்மதம்
இந்தியா கூட்டணி சார்பில் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக நிறுத்த ராகுல்காந்திக்கு சம்மதம் இல்லை என்ற கருத்து பீகாரில் பா.ஜ சார்பில் பரப்பப்பட்டது. அதை அசோக் கெலாட் நிராகரித்தார். அவர் கூறுகையில்,’ எங்கள் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இங்குள்ள அனைத்து கூட்டணிக் கட்சியினருடனும் கலந்தாலோசித்த பிறகு, தேஜஸ்வி யாதவை எங்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்துள்ளோம்’ என்றார்.
* தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்?
காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கெரா கூறுகையில், ’பீகார் தேர்தலில் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை அறிவிப்பதன் மூலம் நாங்கள் முன்னிலை வகித்துள்ளோம். இப்போது இந்த விவகாரத்தில் தெளிவற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தி, அவர்கள் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தால் யாரை முதல்வராக ஆக்குவது என்று அறிவிப்பதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடமை’ என்றார்.
* பீகார் காங். பொறுப்பாளரை நீக்க கோரி போராட்டம்
பீகாரில் அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைவர்கள் நேற்று பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாருவை உடனடியாக நீக்க கோரி போராட்டம் நடத்தினார்கள். வேட்பாளர் தேர்வில் நடந்த குளறுபடி காரணமாக பீகார் காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சதகத் ஆசிரமம் முன்பு,’ டிக்கெட் திருடன், பீகாரில் இருந்து ஓடிவிடு’ என்ற வாசகங்கள் அடங்கிய பேனருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி மூத்த தலைவர் ஆனந்த் மாதப் கூறுகையில்,’ எங்கள் குரல் ராகுல் காந்தியை அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குறைகளை நிவர்த்தி செய்ய கட்சியில் எந்த அமைப்பும் இல்லை. எனவே, நாங்கள் பத்திரிகையாளர்களிடம் பேசுகிறோம். பீகார் தேர்தலில் கட்சியின் வாய்ப்புகளை கிருஷ்ணா அல்லவாரு குழப்பிவிட்டார். அசோக் கெலாட், பூபேஷ் சிங் பாகேல் அல்லது ரன்தீப் சுர்ஜேவாலா போன்ற ஒருவர் இருந்திருந்தால், விஷயங்கள் இப்படி நடந்திருக்காது. ஆனால் அல்லவாரு ஒரு அரசியல் நபர் அல்ல. அவர் ஒரு கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரலில் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். கட்சிக்கு வெளியே இருந்து வந்த சக்திகளால் நடப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஸ்லீப்பர் செல் கூட இருக்கலாம்’ என்றார்.
* இந்தியா கூட்டணியின் துணை முதல்வர் வேட்பாளர் யார் இந்த முகேஷ் சஹானி?
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி வென்றால் முதல்வராக தேஜஸ்வியும், துணை முதல்வராக முகேஷ் சஹானியும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று இப்போதே அறிவிக்கப்பட்டுள்ளது. தேஜஸ்வி அனைவருக்கும் தெரியும். ஆனால் யார் இந்த முகேஷ் சஹானி என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. அவர் இந்தியா கூட்டணியில் உள்ள விகாஷீல் இன்சான் கட்சி தலைவர். அவரை ஆதரிக்கும் மல்லா சமூகம் பீகார் முழுவதும் பரவியுள்ளது. குறிப்பாக வடக்கு பீகார் முழுவதும் அந்த சமூகத்திற்கு அதிக செல்வாக்கு உள்ளது. கடந்த முறை இவர் வெளியேறியதால் தான் பா.ஜ கூட்டணி வென்றது.
இந்த முறை 25 தொகுதி கேட்டும், இந்தியா கூட்டணியில் 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிருப்தியில் இருந்த அவர் துணை முதல்வர் பதவி கேட்டார். துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று நினைத்ததால் தான் 25 இடங்களுக்கு குறைவாகவே ஒப்புக்கொண்டேன். இது நடக்கவில்லை என்றால், எனது ஆதரவாளர்களை நான் எப்படி எதிர்கொள்ள முடியும்? எனது ஆதரவாளர்களிடம் சென்று எப்படி வாக்கு கேட்க முடியும்? என்று முகேஷ் சஹானி கேட்டது இந்தியா கூட்டணியை அதிர வைத்தது.
வேறு வழியில்லாமல் கூட்டணி கட்சிகளின் ஒப்புதல் பெற்று துணை முதல்வர் வேட்பாளராக முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார். 44 வயதான சஹானி, மல்லா, சஹானி மற்றும் நிஷாத் சமூகங்களின் வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் முழுவதும் அவர்களுக்கு 10 சதவீத வாக்கு வங்கி உள்ளது. மிதிலாஞ்சல் மற்றும் சீமாஞ்சல் பகுதிகளில் அதிக செல்வாக்கு உள்ளது. தொகுதிப் பங்கீடு பிரச்னை தொடர்பாக இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலையில் இருந்த அவரை ராகுல் காந்தி பேசி சமரசப்படுத்தி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
முகேஷ் சஹானி கூறுகையில்,’ பாஜ எங்கள் கட்சியை உடைத்து எங்கள் எம்எல்ஏக்களை வேட்டையாடியது. அந்த நேரத்தில், எங்கள் கைகளில் கங்கா நதி நீருடன் நாங்கள் சபதம் செய்திருந்தோம். நேரம் வந்துவிட்டது. இந்தியா கூட்டணியுடன் வலுவாக நின்று, பீகாரில் எங்கள் அரசாங்கத்தை அமைத்து, பாஜவை மாநிலத்திலிருந்து வெளியேற்றுவோம்’ என்றார். 1981 மார்ச் 31 அன்று பீகார் மாநிலத்தின் சுபால் மாவட்டத்தில் ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்த முகேஷ் சஹானி மல்லாவின் மகன்(மீனவ மகன்) என்று அழைக்கப்படுகிறார். அவரது குழந்தைப் பருவம் மிகவும் வறுமையில் கழிந்தது. மேலும் சிறு வயதிலிருந்தே, நிஷாத் சமூகத்தின் பின்தங்கிய நிலையை அவர் மிக நெருக்கமாகக் கண்டார்.
இவரது ஆதரவாளர்கள் கங்கை நதி ஓரம் பரவி உள்ளனர். முகேஷ் சஹானி 2015 தேர்தலின் போது முதலில் பாஜவை ஆதரித்தார். நிஷாத்களுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்குவதாக பாஜ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதைத் தொடர்ந்து அவரது ஏமாற்றம் அதிகரித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அவர் தனது சமூகத்தை அணிதிரட்ட 2015ல் நிஷாத் விகாஸ் சங்கத்தை நிறுவினார். பின்னர் 2018 இல் விகாஷீல் இன்சான் கட்சியை (விஐபி) தொடங்கினார். 2019 மக்களவைத் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. 2020 சட்டப்பேரவை தேர்தலில் 4 இடங்கள் கிடைத்தது. கூட்டணி அமைச்சரவையில் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
* ஷாருக்கான், சல்மான்கான் படங்களில் பணியாற்றியவர்
1999 ஆம் ஆண்டு தனது 19 வயதில் தனது படிப்பைக் கைவிட்டு பீகாரிலிருந்து மும்பைக்கு சென்ற அவர் ஒரு அழகுசாதனக் கடையில் பணியாற்றினார். இறுதியில் அவர் இந்தி திரைப்படத் துறையில் நுழைந்தார். ஷாருக்கான், சல்மான்கான் படங்களுக்கு செட் டிசைனராக மாறினார். முகேஷ் சினிவேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தனது சொந்த நிறுவனத்தைதொடங்கினார். 2002 ஆம் ஆண்டு ஷாருக்கானின் தேவதாஸ் படத்தில் அவரது செட் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் போன்ற படங்களிலும் பணியாற்றினார்.
