பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ கூட்டணிக்கான தொகுதி பங்கீடு இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்தியா கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், இன்னும் பிரதான கூட்டணிகளான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் குறித்த விவரங்களை இன்னும் அறிவிக்கவில்லை.
இந்தியா கூட்டணி மற்றும் பா.ஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக பா.ஜ கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா, ஒன்றிய அமைச்சர்கள் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிருப்தியில் உள்ளன. இதுதொடர்பாக பீகார் மாநில பா.ஜ தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’ பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டுக்காக பாஜடெல்லியில் 3 நாள் தேர்தல் குழு கூட்டத்தை நடத்தியது. அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. பாஜ ஒரு தேசிய கட்சி. பாஜவின் மத்திய தலைமை தேர்தல் குழு, மத்திய நாடாளுமன்ற குழு மூலம் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது. தொகுதிப் பங்கீடு பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை வேட்பாளர்கள் டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். இன்று காலை 11 மணிக்கு சீட் பகிர்வு மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றார்.
* பா.ஜ கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 101, பா.ஜ 100, எல்ஜேபி (ராம் விலாஸ்) 25 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
* பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தேர்வு நடத்துவதற்கான செயல்முறை உடனடியாகத் தொடங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
* ஜன் சக்தி ஜனதா தள தலைவரும், தேஜஸ்வியாதவ் சகோதரருமான தேஜ் பிரதாப் கூறுகையில்,’ வீட்டுக்கு ஒருவருக்கு ேவலை என்ற ஆர்ஜேடி அறிவிப்பு பிறகு வரட்டும். முதலில் ஆர்ஜேடி அரசு அமைக்கட்டும் பார்க்கலாம்’ என்றார்.
* அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தோற்றது போல் பீகார் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தனது ரகோபூர் தொகுதியில் தோற்பார் என்று பிரசாந்த் கிஷோர் ெதரிவித்தார்.
* இந்தியா கூட்டணியால் புறக்கணிக்கப்பட்ட ஏஐஎம்ஐஎம் பீகாரில் 100 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.
* பீகார் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதி பா.ஜ எம்எல்ஏ மிஸ்ரி லால் யாதவ் திடீரென பா.ஜவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி? சி வோட்டர் கருத்து கணிப்பில் தகவல்;
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு 40 % இருப்பதாக சி-வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல்வராக வருவதற்கு தகுதி உள்ளவர் யார் என்பதில் தேஜஸ்வி யாதவுக்கு 36.5 % பேரும் பிரசாந்த் கிஷோருக்கு 23.20 % பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய முதல்வர் நிதிஷ்குமாரை 15.90 % பேர் மட்டுமே ஆதரித்துள்ளனர். சிராக் பஸ்வானை 8.80 % பேர் ஆதரித்துள்ளனர்.