புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு நவ.6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த தேர்தலில் சுமார் 8.5 லட்சம் ஊழியர்களை தேர்தல் பணிக்கு நியமிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதில் 4.53 லட்சம் பேர் வாக்குச் சாவடி பணியாளர்கள், 2.5 லட்சம் காவல்துறை அதிகாரிகள், 28,370 வாக்கு எண்ணும் பணியாளர்கள், 17,875 நுண் பார்வையாளர்கள், 9,625 துறை அதிகாரிகள், 90,712 அங்கன்வாடி ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், வாக்குச் சாவடிகளில் புர்கா மற்றும் குங்ஹாட் அணிந்த பெண்களை அடையாளம் காண அங்கன்வாடி பணியாளர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே பீகார் முழுவதும் சுதந்திரமான மற்றும் நியாயமான சட்டப்பேரவை தேர்தலை உறுதி செய்வதற்காக இரண்டு கட்ட தேர்தலிலும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பீகார் டிஜிபி வினய் குமார் தெரிவித்தார். மொத்தத்தில் 60,000 பீகார் போலீசாரும், பிற மாநிலங்களைச் சேர்ந்த 2,000 ரிசர்வ் பட்டாலியன் பணியாளர்கள், பீகார் சிறப்பு ஆயுதப்படை காவல்துறையின் 30,000 ஊழியர்கள், 20,000க்கும் மேற்பட்ட காவலர்கள், பயிற்சி பெற்று வரும் சுமார் 19,000 புதிதாக நியமிக்கப்பட்ட கான்ஸ்டபிள்கள், சுமார் 1.5 லட்சம் கிராமப்புற போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
* பீகார் மாநிலத்தில் மொத்தம் 90,712 வாக்குச் சாவடிகள் உள்ளன
* இதில் 13,911 நகர்ப்புறங்களிலும் 76,801 கிராமப்புறங்களிலும் உள்ளன.
* தேர்தல் களத்தில் குதித்த ஐபிஎஸ் அதிகாரி
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஷிவ்தீப் வாமன்ராவ் லாண்டே இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற அவர் ஏப்ரல் மாதம் இந்து சேனா என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் இன்று வரை அங்கீகரிக்காததால் பீகார் தேர்தலில் ஜமல்பூர் மற்றும் அராரியா ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
* 51 வேட்பாளர் பட்டியல்: பிரசாந்த் கிஷோர் ரிலீஸ்
பீகார் தேர்தலுக்கான 51 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பிரசாந்த் கிஷோர் வெளியிட்டார். அவரது ஜன்சுராஜ் கட்சி சார்பில் முதற்கட்டமாக நிறுத்தப்பட்டுள்ள 51 வேட்பாளர்களில் 11 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், 17 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், ஒன்பது பேர் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். கர்காஹரைச் சேர்ந்த பிரபல போஜ்புரி பாடகர் ரித்தேஷ் ரஞ்சன் பாண்டே முக்கிய வேட்பாளார். இந்த பட்டியலில் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறவில்லை.