Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகார் சட்டப்பேரவை தேர்தல் 121 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு: 4.5 லட்சம் பாதுகாப்பு படையினர் குவிப்பு

பாட்னா: பீகாரில் இன்று 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாதுகாப்பு பணியில் 4.5 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. பீகாரில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. முதல் கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், ராகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜ மூத்த தலைவர் சதீஷ் குமார் களமிறங்கி உள்ளார். பீகார் துணை முதல்வரும், பாஜ மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரி , தாராபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து லாலுகட்சி சார்பில் அருண் ஷா களமிறங்கியிருக்கிறார். லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ஜன சக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அவர் மஹூவா தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து லாலுபிரசாத் கட்சி சார்பில் முகேஷ், எல்ஜேபி (ராம் விலாஸ்) சார்பில் சஞ்சய் குமார் சிங், ஜன் சுராஜ் சார்பில் இந்திரஜித் பிரதான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 16 தொகுதிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணியில் 1500 கம்பெனி துணை ராணுவப்படையினர் உட்பட மொத்தம் 4.5 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* பீகாரில் மொத்தம் 7.24 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

* முதல்கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் இன்று 3.75 கோடி பேர் வாக்களிக்கிறார்கள்.

* 2ஆம் கட்டமாக நவ.11 அன்று 122 தொகுதிகளில் 3.49 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

* நவ.14ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

* ஒன்றிய அமைச்சர் மருமகள் மீது தாக்குதல்

பிகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஒன்றிய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி சார்பில் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் கயாவில் உள்ள பரசத்தி தொகுதியில், ஜிதன்ராம் மஞ்சியின் மருமகள் ஜோதி மஞ்சி போட்டியிடுகிறார். அவர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட போது தாக்கப்பட்டார். ​​ஜோதி மஞ்சியின் பிரசார வாகனம் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதில், அவரும் காயமடைந்தார். தாக்குதலில் அவரது தலையில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் அங்கு விரைந்தனர். ஜோதி மஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.