சென்னை: பீகார் தேர்தல் அனைவருக்கும் ஒரு பாடம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் பாடம் வழங்கியுள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: பெரும் வெற்றியைப் பெற்றுள்ள மூத்த தலைவர் நிதிஷ் குமாருக்கு பாராட்டுகள். பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓயாமல் பரப்புரை மேற்கொண்ட இளந்தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு எனது பாராட்டுகள்.நலத் திட்ட விநியோகம், சமூக மற்றும் கொள்கைக் கூட்டணிகள், நாம் சொல்ல வேண்டிய அரசியல்ரீதியான செய்தியைத் தெளிவாக மக்களிடம் சொல்வது, இறுதி வாக்கு பதிவாகும் வரை அர்ப்பணிப்புடன் தேர்தல் பணியாற்றுவது எனப் பலவற்றையும் ஒரு தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள அனுபவமிக்க தலைவர்கள் இத்தகைய செய்தியை உணரவும், இனி எழும் சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்கவுமான ஆற்றலைப் பெற்றவர்கள்.அதேவேளையில், இத்தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளையும் பொறுப்பற்ற செயல்களையும் இல்லாமல் ஆக்கிவிடாது.
தேர்தல் ஆணையத்தின் மீதான மரியாதை இதுவரை இல்லாத அளவுக்குக் கீழிறங்கியுள்ளது. வலுவான, நடுநிலையான தேர்தல் ஆணையத்தைக் கோருவது நம் நாட்டு மக்களின் உரிமை. தேர்தலில் வெற்றி பெறாதோரின் நம்பிக்கையையும் பெறும் அளவுக்கு தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தல்களை நடத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


