பீகார் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலில் வரலாற்று சாதனை 121 தொகுதிகளில் 64 சதவீத ஓட்டுப்பதிவு: பா.ஜ துணை முதல்வர் வாகன அணிவகுப்பு தாக்கப்பட்டதால் பரபரப்பு
பாட்னா: பீகார் சட்டப்பேரவைக்கு நடந்த முதற்கட்ட தேர்தலில் வரலாற்று சாதனையாக 64 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹாவின் வாகன அணிவகுப்பு தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் இரண்டுகட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
இதற்காக 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 4.5 லட்சம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். முதல்வர் நிதிஷ் குமார், துணைமுதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், விஐபி தலைவர் முகேஷ் சஹானி, ஒன்றிய அமைச்சர்கள் கிரிராஜ் சிங் மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் லாலன் ஆகியோர் நேற்று தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்தனர். முதல்வர் நிதிஷ்குமார் தனது சொந்த ஊரான பக்தியார்பூரில் உள்ள வாக்குச்சாவடியிலும், துணை முதல்வர் சாம்ராட் சவுத்திரி, தாராபூரிலும், ஒன்றிய அமைச்சர் கிரிராஜ்சிங், லக்கிசராய் பகுதியிலும் வாக்களித்தார்.
தேஜஸ்வி யாதவ், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரிதேவி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். ஜனசக்தி ஜனதா தளத் தலைவரும், லாலு பிரசாத்தின் மூத்த மகனுமான தேஜ் பிரதாப்பும் அதே வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சிம்ரி பக்தியார்பூர், மஹிஷி, தாராபூர், முங்கர், ஜமல்பூர் மற்றும் சூர்யகர்ஹா சட்டமன்றத் தொகுதியின் 56 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது.
மற்ற வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. பீகாரில் உள்ள 45,341 வாக்குச் சாவடிகளில் 36,733 பூத்கள் கிராமப்புறங்களில் உள்ளன. அங்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பீகாரில் நடைபெற்ற வாக்குப்பதிவை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் ஆன்லைன் மூலம் நேரடியாக கண்காணித்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதல் முறையாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ். சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து வாக்குப்பதிவை கண்காணித்தனர்.
முதல் கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா, 12 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். இளம் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் (பாஜ - அலிகஞ்ச் தொகுதி), போஜ்புரி சூப்பர் ஸ்டார்கள் கேசரி லால் யாதவ் (ஆர்ஜேடி - சாப்ரா தொகுதி), ரித்தேஷ் பாண்டே (ஜன் சுராஜ் கட்சி - கர்கஹார் தொகுதி) ஆகியோரும் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். அந்த தொகுதிகளிலும் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது.
இதற்கிடையே லக்கிசராய் பகுதியில் பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சென்ற வாகன அணிவகுப்பு தாக்கப்பட்டது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் மக்கள் கற்கள், மாட்டு சாணம், செருப்புகள், கட்டைகளை வீசி தாக்கினார்கள். இதில் அவரது பாதுகாப்புக்கு சென்ற வாகனங்கள் சேதம் அடைந்தன. அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினார்கள். இந்த தாக்குதலில் துணை முதல்வரின் ஆதரவாளர் விபீஷன் கேவட் காயம் அடைந்ததாகவும், ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது லக்கிசராய் எஸ்பி அஜய்குமார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா குற்றம் சாட்டினார்.
லாலுகட்சி தொண்டர்கள் என்னை தாக்கியதை அவர் தடுக்கவில்லை என்று புகார் கூறிய அவர் இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து துணை முதல்வர் வாகன அணிவகுப்பு தாக்கப்பட்டது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க பீகார் டிஜிபிக்கு ஞானேஷ்குமார் உத்தரவிட்டார். இதுபற்றி தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ’சட்டத்தை யாரும் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இந்த ஒரு வன்முறை சம்பவத்தை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடந்தது. மாலை 6 மணிக்கு பிறகும் நீண்டவரிசையில் நின்று மக்கள் வாக்களித்தனர். பீகார் முதற்கட்ட தேர்தலில் வரலாற்று சாதனையாக 64.66 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக பீகார் தலைமைத் தேர்தல் அதிகாரி வினோத் சிங் குஞ்சியால் தெரிவித்தார். அவர் கூறுகையில்,‘45,341 வாக்குச் சாவடிகளில் அமைதியாக வாக்குப்பதிவு முடிந்தது. லக்கிசராய் மற்றும் சரண் ஆகிய இடங்களில் நடந்த சிறிய மோதல்களை தவிர வேறு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
மாலை 6 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சுமார் 64.66 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 143 புகார்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்க்கப்பட்டன. பக்சர், பதுஹா மற்றும் சூர்யாகர்ஹாவில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் மக்கள் ேதர்தல் புறக்கணிப்பு செய்தனர்’ என்றார். இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும். நவம்பர் 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
* எல்லாம் அமைதியாக இருந்தது
லக்கி சராய் எஸ்பி அஜய்குமார் கூறுகையில்,’ நான் காலையில் இங்கு வந்தேன், எல்லாம் அமைதியாக இருந்தது. அவர் (துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா) வந்தபோது, சிலர் அவரை எதிர்த்தனர். நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.
* என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது புல்டோசர் மூலம் நடவடிக்கை: துணை முதல்வர் மிரட்டல்
பீகார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா தனது வாகன அணிவகுப்பு மீது நடந்த தாக்குதல் குறித்து கூறுகையில், ‘ஆர்ஜேடி எம்எல்சி அஜய் மற்றும் காங்கிரஸ் தலைவர் சுஜீத் ஆகியோர் இணைந்து கிராம மக்களை மிரட்டினர். இருவரும் குடிபோதையில் இருந்தனர். எங்கள் காரை நிறுத்தியபோது, என்னையும் மிரட்டினர். மாவட்ட நிர்வாகத்தின் கோழைத்தனமும் திறமையின்மையும் தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் நிச்சயமாக தேர்தல் ஆணையத்திடம் பேசுவோம்.
மீண்டும் தேசியஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது புல்டோசர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நான் இங்கே கிராமத்தில் தான் இருக்கிறேன். லக்கிசராய் எஸ்பி மிகவும் பலவீனமானவர், கோழை. இங்குள்ள மக்கள் துணை முதல்வரை உள்ளே விடுவதில்லை. அவர்கள் கற்களையும் மாட்டு சாணத்தையும் வீசியுள்ளனர். இவர்கள் ஆர்ஜேடி குண்டர்கள். அவர்கள் ஆட்சிக்கு வராதபோதும் அவர்களின் குண்டர்களைப் பாருங்கள். அவர்கள் என் வாக்குச்சாவடி முகவரை மிரட்டி காலை 6.30 மணிக்கு திருப்பி அனுப்பினர். வாக்காளர்களை வெளியே வர விடுவதில்லை’ என்றார்.
* பீகாரில் வரலாற்று சாதனை வாக்குப்பதிவு
பீகார் சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு பதிவு செய்துள்ளது. முதற்கட்ட தேர்தல் நடந்த 121 தொகுதிகளில் வாக்களிக்கும் தகுதியுடைய 3.75 கோடி வாக்காளர்களில் 64.66 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை வாக்குச் சாவடிகளில் பதிவு செய்தனர். இது பீகார் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஆகும்.
1951-52 ஆம் ஆண்டு நடந்த முதல் பீகார் சட்டப்பேரவை தேர்தலின் போது, வரலாற்றில் மிகக் குறைந்த அளவாக 42.6 சதவீதம் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக 2000 ஆம் ஆண்டு 62.57 சதவீத வாக்குகள் பதிவாகின. 2020ஆம் ஆண்டு தேர்தலில் 57.29 சதவீதம் பதிவாகி இருந்தது. மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக 1998ல் 64.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தற்போதுதான் முதன்முறையாக மிகவும் அதிகபட்சமாக 64.66 சதவீதம் பதிவாகி உள்ளது.
* எதிரும் புதிருமாக செயல்படும் இருமகன்களுக்கும் வாழ்த்து தெரிவித்த ராப்ரிதேவி
பீகார் தேர்தலில் லாலுபிரசாத் யாதவ் மூத்த மகன் தேஜ்பிரதாப் தனிக்கட்சி தொடங்கி, மஹூவா தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் தந்தை லாலுவின் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். நேற்று பாட்னாவில் ஓட்டு போட்ட அவரது தாயார் ராப்ரி தேவி கூறுகையில்,’ என் இரு மகன்களுக்கும் வாழ்த்துகள். தேஜ் பிரதாப் தனது சொந்தக் காலில் நின்று தேர்தலில் போட்டியிடுகிறார். நான் ஒரு தாய், என் இரு மகன்களுக்கும்(தேஜ்பிரதாப், தேஜஸ்வி) எனது வாழ்த்துகள். பீகார் மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்க வேண்டும்’ என்றார்.
* உங்கள் திருமணம் எப்போது? சிறுவன் கேள்விக்கு ராகுல் பதில்
பீகார் தேர்தலை முன்னிட்டு இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் அராரியாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும், வலைப்பதிவரான சிறுவன் அர்ஷ் நவாசுக்கும் இடையே உரையாடல் நடந்தது. அப்போது ராகுல் சிறுவனின் கையை குலுக்கி, உரையாடலைப் பகிர்ந்து கொண்டு, சிறுவனை அன்பாகத் தட்டிக் கொடுத்த நடந்து சென்றார். இதுபற்றி சிறுவன் அர்ஷ் நவாஸ் கூறுகையில்,’ ராகுல் காந்தி எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் எனது வேலை முடிந்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளித்தார்’ என்றார்.
* எம்எல்ஏ மீது தாக்குதல்
சரண் மாவட்டத்தின் மஞ்சி சட்டமன்றத் தொகுதியில், சிபிஐ (எம்எல்) விடுதலை எம்எல்ஏ சத்யேந்திர யாதவின் வாகன கான்வாய் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் எம்எல்ஏ உட்பட காரில் இருந்தவர்கள் தாக்குதலில் இருந்து தப்பினர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
* கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: டிஐஜி
துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா தாக்கப்பட்டது குறித்து முங்கர் பகுதி டிஐஜி ராகேஷ்குமார் கூறுகையில்,’ இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். துணை முதல்வருடன் நான் பேசியுள்ளேன். தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த வன்முறையை தவிர முங்கர், லக்கிசராய், ஷேக்புரா தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் வாக்குப்பதிவில் எந்த இடையூறும் ஏற்படவில்லை’ என்றார்.
