Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரதமர் மோடி வரும் 24ம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார்

பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி வரும் 24ம் தேதி தொடங்குகிறார். மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி வரும் 24ம் தேதி பிரசாரத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாட்னாவில் பாஜ மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி வரும் 24ம் தேதி சமஸ்திபுராவில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

அன்றைய தினமே பெகுசராயில் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். இந்த மாத இறுதிக்குள் 4 பிரச்சாரப் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார். பீகார் தேர்தலில் பாஜ மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களிலும் உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) மற்றும் ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

* பொருளாதார புலனாய்வு குழு 6 ஆண்டுக்கு பின் ஆய்வு

பீகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி 6 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் தனது பொருளாதார புலனாய்வு குழுவை கூட்டி உள்ளது. தேர்தலின் போது பணம், மது, போதைப்பொருள் வழங்குவதை தடுக்க இக்குழு கடந்த 2014ல் உருவாக்கப்பட்டது. 2014 முதல் 2019 வரை தேர்தலுக்கு முன்பாக இக்குழு கூடி ஆலோசனை நடத்தி வந்தது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதுபோன்ற கூட்டம் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடந்துள்ளது. பொருளாதார புலனாய்வு குழுவில் மத்திய நேரடி வரிகள் வாரியம், மறைமுக வரிகள் வாரியம், சுங்க வாரியம், அமலாக்க இயக்குநரகம், ரிசர்வ் வங்கி என மொத்தம் 17 துறைகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் சீட் தர மறுப்பு சட்டையை கிழித்து சாலையில் அழுது புரண்ட பிரமுகர்

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வீட்டிற்கு வெளியே நேற்று பயங்கர பரபரப்பு நிலவியது. பீகார் சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்போடு கட்சியை சேர்ந்த மதன் சா என்பவர் காத்திருந்தார். இந்நிலையில் அவருக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகின்றது. இதன் காரணமாக மனமுடைந்த அவர் கட்சியின் தலைவர் லாலு வீட்டின் முன்னே சட்டை கிழித்துக்கொண்டு சாலையில் அழுது புரண்டார்.

நீண்டகாலமாக கட்சியின் இருக்கும் இவர் கடந்த 2020ம் ஆண்டு மதுபன் தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறார். ஆனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் இந்த முறை கட்சி தனக்கு வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து மதன் சா கூறுகையில், \\” என்னிடம் ரூ.2.70கோடி கேட்கப்பட்டது.

என் பிள்ளைகளின் திருமணங்களை நிறுத்தி வைத்ததன் மூலமாக அந்த தொகையை சமாளித்துவிட்டேன். ஆனால் எனக்கு இப்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படவில்லை.குறைந்தபட்சம் எனக்கு அவர்கள் அந்த பணத்தையாவது திருப்பி தர வேண்டும்\\” என்றார். இன்று வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில் அந்த தொகுதியில் மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சிகள் போட்டியிடுமா என்பது தெரியவில்லை.